நூறாசிரியம்/வானாட் டாயம்
நெஞ்சு நிலனாக நினைவு வித்தாக
ஐம்புலக் கொழுசார் அறிவு பகடாக
முயல்வுந் துணிவும் இணையே றாக
வைகலு முழுது, கற்ஸ்ரீர் பாய்ச்சி
ஒழுகுநாண் நட்புரன் ஏம மாக
5
ஐய,நீ பயந்த வாணாட் டாயத்து
வையம் உய்தல் வேண்டி அயர்வின்றி
மெய்யின் விளைபுகு வுணர்வேம்
செய்பயன் முற்றும் நின்னளி யன்றே!
பொழிப்பு:
எம் நெஞ்சம் நிலனாகவும், அந் நெஞ்சகத்தே ஊன்றப் பெறும் நினைவே வித்தாகவும், ஐம்புலன்கள் எனும் கொழுக்களால் சாரப் பெற்ற எம் அறிவு ஏராகவும், முயற்சி, துணிவு என்பனவே அவ்வறிவு ஏரின் பிணிக்கப் பெற்ற இணை ஏறுகள் ஆகவும் கொண்டு நாள்தொறும் உழுது, (அவ்வித்து வளரக் கல்வி என்னும் நீரைப் பாய்ச்சியும், ஒழுக்கம், நானம், நட்பு, உரன் என்னும் நாற்புடைக் காப்பிட்டும், தலைவனே, நீ நல்கிய இவ் வாழ்நாள் எனும் உரிமைக் காலத்து, இவ் வையகம் உய்யுமாறு விழைந்து, அயர்விலாது, மெய்மையின் விளைவு செயப் புகுந்த இவ்வுணர்வுடையேம் செயக்காணும் பயன்கள் முழுவதும் நின் அருட் கொடையே !
விரிப்பு:
இப்பாடல் புறத்துறையைச் சார்ந்ததாகும்.
தூசகல் நெஞ்சோடு மாசறு காட்சியின் துலங்கத் தோன்றிய மெய்யறிவினார்க்கு இவ்வுலக இயக்கமாக அமைந்த வாழ்க்கை, வையம் உய்யுமாறு விழைதற்கும், அதன் பொருட்டு அயர்வின்றித் தம் பொறி புலன்களால் பயன் விளைத்தற்குமே என்பதை வலியுறுத்திக் கூறுவதாகும் இப்பாட்டு.
இப் பாடலின்கண் மெய்யறிவினார் செய்யும் அறிவு வேளாண்மை நன்கு விளக்கப் பெற்றது. நிலனுழுது பயன் விளைக்கும் உழவோர்க்கும், புலனுழுது பயன் விளைக்கும் புலவோர்க்கும் பொதுவாய விளைகளும் கருவிகளும் அமையக் கூறியது கருதற் பாலது.
நெஞ்சம் நிலமாகவும், அதன்கண் ஊடாடும் நினைவு, அந்நிலத்தின்கண் விதைக்கப் பெறும் விதையாகவும், நெஞ்சத்தை உழும் அறிவு, நிலத்தை உழும் ஏராகவும், அவ்வறிவு முற் செலப் பயன்படும் ஐம்புலன் உணர்வுகளும், ஏருக்கமைந்த ஐந்து கொழு முனைகளாகவும், அறிவாகிய ஏர் உள்ளத்தை உழுதல் செய்யத் துணை செய்யும் முயற்சி, துணிவு இரண்டு இயல்பூக்கங்களும் ஏரை இழுத்துச் செல்லும் இரண்டு காளைகளாகவும், வாழ்வின் ஒவ்வொரு நாளுமே உழவு செய்யப்பெறும் பருவமாகவும், கல்வி முயற்சியே பயன் விளையப் பாய்ச்சப்பெறும் நீராகவும், ஒழுக்கம், நாணம், நட்பு, உரன் என்பவையே அந்நெஞ்ச நிலத்து விளையப் போகும் மெய்யறிவுப் பயிர்க்கு நாற்புறமும் காப்பாக அடைக்கப்பெற்ற வேலிகளாகவும் நமக்குற்ற வாழ்நாள் நாம் வேளாண்மை செய்தற்காக அளிக்கப்பெற்ற உரிமைப் பட்டயமாகவும், வையம் உய்தல் வேண்டி அயர்வின்றி மெய்யாக வேளாண்மை செய்து பயன் காணுவதே நமக்குற்ற கடன் என்றும், அதுவே நம் தலைவனாகிய இறைவன் நமக்கிட்ட கட்டளை என்றும் இப்பாட்டின் கண் உருவக வழி உணர்த்தப் பெற்றுள்ளது.
நெஞ்சம் - உள்ளகம்-உளம்-மனம், நில் என்னும் வேரடியாகப் பிறந்த சொல். பிறிதொரு பாட்டில் மனம் என்னும் சொல் மன்நிலைத்தல் என்னும் வேரடியாகப் பிறந்த சொல் என்று காட்டப் பெற்றது. உள்ளம் என்பது உள்-நினை என்னும் பொருளடியாகப் பிறந்த சொல் என்பதும் முன்னர் காட்டப்பெற்றது. ஈண்டு நெஞ்சம் என்பதும் நினைவு என்னும் பொருளை அடிநிலையாகக் கொண்டே தோன்றிய சொல்லாகும்.
நில்-நிள்-நிளைநினை-நினைவு.
நிள்-நெள்-நென்நென்சு-நெஞ்சு-நெஞ்சம் ‘சு பெயர்ச்சொல் இறுதி.
நினைவுக் கிடனாகிய பொருள் நெஞ்சம். இனி நெஞ்சம் உள்ளம் மனம் என்னும் முச்சொற்களும் ஒரு பொருள் குறித்த பல சொற்கள் இவை மூன்றும் மூன்று பயன் நோக்கி முச் சொற்களாக வெளிப்பெற்றன. புதிய கருத்துப் புலப்பாடோ, பயனோ இன்றிச் சொற்கள் பிறவா.
தமக்கு உள்ளமாக அமையப் பெற்ற அகக் கருவி மூன்று நுண்ணிய இயக்கங்களைக் கொண்டது.வல்லார் உள்ளத்து அலைகளாக வெளிப்படும் நினைவலைகளைத் தாங்கும் அல்லது வாங்கும் அலை வாங்கி ஆகவும், தன்னிடத்தே எழும்பும் நினைவை அலைகளாக வெளிப்படுத்தும் அலைபரப்பியாகவும், நினைவை வாங்கவோ, வெளிப்படுத்தவோ விழையாவாறு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் அடக்கியாகவும் மனம் மூவியக்கம் கொண்டது. இனி, இம்மனம் இம் முத்திறத்தும் அறிவுடன் சேர்ந்து உள் வாங்கப் பெற்ற அல்லது வெளியிடப் பெற்ற அல்லது நிலைநிறுத்தப் பெற்ற மன வலைகளின் சூடும் குளிர்ச்சியுமாகிய தன்மைகளைத் துய்க்கும் ஆற்றல் வாய்ந்தது. அறிவுடன் கலந்தாலல்லது. மனம் துய்ப்பு உணர்வைப் பெறாது. குழந்தைகளின் உள்ளம் நினைவலைகளை வாங்கவும், வெளிப்படுத்தவும் இயல்வதொன்றா யிருப்பினும் துய்ப்பு உணர்வற்ற நிலையில் இயங்கும். சிற்சிலகால் நாம் மகிழ்வூட்ட மகிழ்தலும், சினமூட்ட அழுங்குதலும் செய்வது யாங்கன் எனின், அது கருவிகளின் இயல்பூக்கத்தால் ஏற்படும் உந்து உணர்வு ஆகும் என்க.
இனி மனம் நினைவலைகளை வாங்குமிடத்து நெஞ்சம் என்றும், நினைவலைகளை வெளிப்படுத்துமிடத்து உள்ளம் என்றும், தன்னை நிலைப்படுத்திக் கொள்ளுமிடத்து மனம் என்றும் பெயர் பெறும். மனவலைகள் உள்ளத்தே மோதுறுமிடத்து நினைவு என்றும், மனவலைகள் உள்ளத்தினின்று வெளிப்படுமிடத்து உன்னல். எண்ணல் என்றும், நிலைப்பேறுறுமிடத்துக் கருதல், மன்னுதல் என்றும் பெயர் பெறும்.
இனி, மனமென்னும் அகவுறுப்பு உயிர்த் தொடக்கத்தே நெஞ்சமாக அலர்ந்து உள்ளமாக மலர்ந்து மனமாகப் புலரும் தன்மையது. அலர்தல்-மொக்கு, முகையாதல்; மலர்தல் விரிதல், மலர்ச்சி யுறுதல், புலர்தல் ஒளி பெறுதல், தெளிதல், இனி, நெஞ்சமாக வெளிப்பாடெய்திய மனம், நினைவு மிகமிக உள்ளமாக மலர்கிறதென்றும், உள்ளமாக மலர்ந்த பின்னரே நினைவலைகளை வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுகின்ற தென்றும், அவ்வாங்கு ஆற்றலும் போங்கு ஆற்றலும் வலிவுற்ற பின்னர் தான் புறவிளக்கம் நிறைவுற்று அகவிளக்கம் கால் கொள்ளும் என்றும், அது பின் நிறைவுற நிறைவுறத்தான் மனம் ஒளி பெற்றுத் தெளிவடையும் என்றும் கண்டு கொள்க.
இனி, முதற்கண் நெஞ்சு நினைவை வாங்குந் தன்மையதாக விளங்குமன்றி நினைவை வெளிப்படுத்தும் தன்மையதாக இராது. பெரும்பாலான மாந்தர் வாங்குகின்ற நெஞ்சினோரே. அவர்தம் நெஞ்சகத்துப் படிகின்ற நினைவலைகள் அவருடையனவல்ல. நினைவலைகளை எழுப்பவல்ல உள்ளம் கொண்டார்தம் அழுந்திய உணர்வால் எழுப்பப்பெற்ற, அலைகளாகும். இவ்வலைகளைத் தமக்குற்ற எண்ணங்களாகக் கொள்வர் அப்பேதையர். இவ்வாறு பிறர்தம் நினைவலைகளால் மோதுறப் பெற்ற நெஞ்சம் அவ்வலைகளினின்று பெறப்படும் அறிவுணர்வான் பற்றப்பெற்று வளர்ச்சியுற்றுத் தாமே அத்தகைய நினைவலைகளை வெளிப்படுத்தவல்ல ஆற்றலுறுகின்றது. அதுகாறும் நுழைவாயில் ஒன்றே திறக்கப் பெற்ற நெஞ்சத்திற்குப் பின்னர் வெளி வாயிலும் திறக்கப் பெறும் அவ்வின்ைப்பாடும் நிறைவுற்ற பின் உள்ளம் தன்னைத்தானே உள்நோக்கவல்லது. அக்கால் மனமென்னும் பெயர் பெற்று நிலைப்பேறு பெறும் இது தன்னை அகநோக்கிப் பார்க்குந் திறமுடையதாகலின் அகம் என்னும் சிறப்புப் பெயர் தாங்கப் பெற்றதென்க. இக்கால் மனம் குவிதலுறும். இதுவரை மனவுணர்வோடு அகன்று வளர்ந்த
அறிவும் இக்கால் குவிதலுறும். இதனையே அஃகிய அறிவு என்பர் திருவள்ளுவர். அறிவினதும், மனத்தினதும் பிறவாந் தன்மைகளைத் தேவையுற்ற விடத்து மீண்டுங் கூறுவாம்.
ஈண்டு முதற்கண் பிறருடைய நினைவுகளை வாங்கும் தன்மையுடைய தாகலின் நெஞ்சு எனப்பெற்றது. அது தான் வாங்கும் நினைவே தன்னை வளர்த்துக் கொள்ளப் போகும் உணர்வு மரத்திற்கு வித்தாக அமைதலின் நினைவு வித்து எனப் பெற்றது. வித்து ஊன்றப் பெறுதற்கு அமைந்ததாகலின் இவ்வக வுறுப்பு நிலமென்று கொள்ளப் பெற்றது.
நெஞ்சும் நிலமும் நில் என்ற ஒரேயடியாக பிறந்த இரு சொற்கள்.
வித்து- விள் என்னும் வேரடியாகப் பிறந்த சொல். விள்ளுதல்-விளங்குதல்-வெளிப்படுதல்-வெடித்தல்-மலர்தல்-விரிதல்-விளங்குதல்வேறுபடுதல் முதலிய வினையொழுங்கை நிரல்பட உணர்த்தும் ஒர் அரிய சொல். விள்+து= வித்து. வெளிப்படக்கூடியது-விரிவடையக்கூடியது விளங்குந் தன்மையது; மலருந் திறத்தது; இதனின்று பிறிதொன்றாய் வேறு பட்டு வளருந் தன்மையது என வரும் பல பொருள்களை உள்ளடக்கிய ஒரு சொல்லும் அச் சொல்லுக்குரிய பயனுமாகும்.
வித்துக்கு மூலம் விள், அதன் மூலம் பிள் பிள்-பிளவுற்றுப் பிரியும் தன்மையது.
பிள்-பிள்ளை (தாயினின்று பிரிவது) , பிளவு-ஒன்று இரண்டாதல்.
பிள்-பிண்-பினம்-உயிர் வேறு மெய் வேறாய்ப் பிரிதல் நிலை. உயிர் பிரிய எஞ்சிய உடல்.
பிள்-விள்-வெள்-ஒள், பிள்+து=பித்து விள்+து=வித்து வெள்+இவெளி, ஒள்+இ-ஒளி.
ஒளி வடிவாயும், வெளிவிரிவாயும், வித்து நிலையாயும் நிற்கும் புடவியின் மூலக் கரு வித்தும் பித்தும் ஆகும்.
வித்து- வித்தன்-வித்தகன், பித்து-பித்தன்-பிச்சன்-பிஞ்சகன்-பித்தகன் என வெளிப்படும் இறைப் பொருளணர்த்தும் மூலச் சொற்களை ஒர்க,
இனி, வெளிப்படும் தன்மையுடைய பொருள்கள் யாவும் சூடுறுதல் வேண்டுமாதலின் வித்தென் சொற்கும், பித்தென் சொற்கும் சூட்டுப் பொருள் உண்டு.
வித்து- விந்து-குடும் ஒளியும் சான்ற மூலப் பொருள்.
பித்து-பித்தம்-சூடு, பித்து-பிச்சு-உடலிற் சூடு எழுப்பும் உள்ளுறுப்பு.
இவ்வுலகத்துத் தோன்றிய நுண்ணியதோர் அணுவிலும் இப் புடவியின் (பிரபஞ்சம்) விளக்கம் இருப்பது அண்டபிண்ட உண்மையாகும். அண்டம் பல நிறைவது அகண்டம் அண்டம் பிளவுற நிற்றல் பிண்டம். அண்டத்தின் மூலம் அணு, இவ்வுண்மைகள் போலவே இவ்வுலகத்தின் கண் தோன்றி விளங்கும் அணுத் திரளையாகிய மாந்தனும், அவனின்று வெளிப்படும் உணர்வுகளும், அவை யுணர்த்தும் ஒலிகளும் அவையடங்கிய சொற்களும், அவை நிரம்பிய மொழிகளும் இவ்வுலக உண்மைகளைப் பல்வகையானும் பறை சாற்றி நிற்கும் பிண்டப் பொருள்களே ஆகலின், இவை வழியாகவும் இவ்வண்ட உண்மைகள் உணரப் பெறுதல் கூடும் என்று அறிக. இனி, முதுமொழியாம் நம் முத்தமிழ் மொழியோ மாந்தன் கலப்புறா உணர்வினனாகிக் காடுமேடுகளில் சுற்றியலையும் காட்டு மிராண்டியாக, எவ்வகைத் தன் முயற்சியும். இன்றி, இப்பேரியற்கையின் உணர்வலைக்குள் ஒடுங்கி நின்ற காலத்தே தோன்றிய மொழியாதலின், இம் மொழி ஒன்றின் கண்ணேயே இவ்வியற்கையின் உண்மைகள் நிரப்பப் பெற்றிருத்தலையும், இஃதன்றிப் பிறவெல்லா மொழிகளும் மாந்தன் தன்னுணர்வு மிகப் பெற்று உணர்வு வெளிப்பாட்டுத் திறம் பெற்ற கலப்புணர்வுக் காலத்தே தோற்றுவிக்கப் பெற்றவாகலின், அவற்றுள் கால நிரலாகவும், கருத்து நிரலாகவும் இயற்கையல்லாப் படைத்து மொழிதலாகிய சொற்கள் நிரப்பப் பெற்றிருத்தலையும் மெய்யறிவினால் கண்டு கொள்க. படைத்து மொழிதலாவது, அரிசியைச் சோறாக்கல், மாவாக்கல், கூழாக்கல், அவித்துப் பிட்டாக்கல் போன்ற இயற்கைமேல் மாந்தன் தன்னுணர்வால் அமைத்துக் கொண்ட செயற்கை வினைப்பாடுகள் போல், இயற்கை மூல உணர்வொலிகளைக் கூட்டியும் குறைத்தும், நெளித்தும் சுழித்தும், நலித்தும் படைத்துக் கொண்ட சொற்களும் அவற்றைக் கூட்டுற மொழிதலுமாகும்.
எனவேதாம் நம் முதுமொழித் தமிழ்ச் சொற்கள் மெய்யறிவு பூட்டப் பெற்ற இயற்கைப் பெட்டகங்களாக உள்ள நிலையைத் தெற்றெனத் தெளிந்து தேர்க.
இனி, பிற வெளிப்பாட்டு நிலைகளினின்று வெளியேறி வரும் வலிந்த நினைவலைகளே நமக்கு வித்தாக அமைந்து நாளடைவில் முளை விட்டு அறிவாக வளருமென்று கொள்க. இனி, அவ்வறிவு பகுத்தறிவாயும், அதன் பின் மெய்யறிவாயும் மலருமென்க. இம்மூவகையறிவும் வளர்தலுக்குற்ற நிலன் இந்நெஞ்சே என்பது இப்பாட்டின் முதலடியால் விளக்கப் பெற்றது.
ஐம்புலன் - ஐந்து புலன் உணர்வுகள். புல-புலர்-புலர்தல்-புலத்தல் வெளிப்படுதல் புலம்-புறம்-புறப்படுதல்-புறத்தே தோன்றுதல்- வெளிப்படுதல் உடலின்கண்பொதியப் பெற்ற ஐம்பூத நிலைகளுக்கும் அடிப்படையாகிய உணர்வுகள் வெளிப்பட்டு நிற்றல். புல்-பொல்-பொள்-பொறி. கதிர்மணிகளை வறுத்துச் சூடேற்றுங்கால் அவை பொரிந்து மலர்தலுக்கும் மூலம்'பொல்' என்னும் சொல்லே யாகும். புல்-பொல்-பொரி-பொரிதல்-உள்ளீடு- வெளிப்படல்.
ஐம்புலன்கள் ஆகிய கொழுமுனைகளைக் கொண்ட அறிவாகிய பகடு-ஏர் என்பதாம். ஈண்டு அறிவு ஏராகவும், அவ்வேர் முனைகளாக ஐம்புலனுணர்வுகளும் உருவகிக்கப் பெற்றன. அறிவு முயற்சி ஏரின் உழுதல்
முயற்சியாகக் கொள்ளப் பெற்றது. அறிவெனும் ஒரு கூட்டுணர்வு, புலன்களின் முனைப்புகளின்றே வெளிப்படுதலும், வளர்ச்சியுறுதலும் காண்க. புலன்கள் முனையப் பெறாதவிடத்து அறிவுணர்வு அவ் வழி மழுக்க முறுதலும் உய்த்துணர்க. புலன் உணர்வின் பற்றுதல் தன்மையே அறிவு முனைப்புக்கு வழியாதலின் அறிவுணர்ச்சி புலன் உணர்வின்றி அமையாதாம் என்க. இவ்விடத்துப் புலன்கள் தங்குமிடமாகிய பொறிகளைக் கூறாது புலன்களைக் குறிப்பிட்டதென்னை யெனின், பொறிகள் பழுது படுகின்ற விடத்தும் அவ்விடத்துப் புலன் உணர்வு ஊன்றி நிற்குமாகலின் என்க.என்னை? பொறியிலாவிடத்துப் புலன் உணர்வு கூடுமோவெனில், கூடுமென்றும், ஆனால் அவ்வுணர்வு உடலின் மற்றைய பொறிகளின்வழிச் செயற்பாடு கொள்ளும் என்றும் உணர்க.
இனி, இவ்வறிவென்னும் ஏரைக் கட்டியிழுக்கும் இரு வகை முயற்சிகளும் இரண்டு எருதுகளாக உருவகிக்கப் பெற்றுள்ளன. முயல்வும், துணிவும் இணைந்த இரண்டு எருதுகளாக முன்னின்று அறிவியக்கத்தைச் செய்யும் பான்மையை ஒர்ந்து உணர்க. உடல் முயன்றாலன்றி அறிவு முனையாது, அறிவுப் புலன்கள் ஊன்றினாலன்றி இயங்காது என்பது இவ்வடிகளால் உணர்த்தப் பெறும் உண்மை.
இனி, உடல் முயற்சிக்குத் துணை போவது துணிவு என்க. வேட்கையுள்ள அறிவு அங்காந்து நிற்கும். பொறிகளைத் திருப்பிப் புலன்களை ஊன்றுவிக்கும் உடல் முயலும் முயற்சிக்குத் துணிவு துணை நிற்கும் என்பதாம்.துணிவின்றி முயற்சி சிற்சிலகால் தடைப்பட்டுப் போகும். எனவே தான் இரண்டும் ஒருமித்து நடையிட வேண்டி எருதுகளாக உருவகம் பெற்றன.
வைகலும் உழுது என்பது ஒவ்வொரு நாளும், நாளுக்குரிய பொழுதும் இடையறாது உழுது என்றபடி வைகுதல்-ஏகுதல், இருத்தல், எதிர்தல் ஆகிய பொழுதின் முந்நிலைகளையும் உணர்த்தும் ஒர் அரிய சொல். வைகல்கழிந்த பொழுது கழியும் பொழுது-கழிய வரும் பொழுது எனும் முப் பொருளும் படும். படவே எப்பொழுதும் எனப் பொருள் பெறும் நாளும் என்பதற்கும் எந்நாளும் என்றே பொருளாம். எனவே வைகலும் உழுது என்பதற்கு ஒவ்வொரு கழிகின்ற நொடியும், பொழுதும், நாளும் உழுது என்பது பொருளாம். உழுதல் தொழில் இடையறாது நடைபெறல் வேண்டும் என்பது குறிக்கப் பெற்றது. பயிருழவுக்குப் பொழுது வேண்டுவதுபோல் அறிவுழவுக்கும் பொழுது வேண்டும் என்பதும், அதற்கு முப்பொழுதும் உரியதாம் என்பதும் கூறப் பெற்றன.
கற்பு நீர் பாய்ச்சி - கல்வி என்னும் நீரைப் பாய்ச்சி நெஞ்ச நிலத்தில் ஊன்றப் பெற்ற நினைவு என்னும் வித்திற்குக் கல்வி என்னும் நீரைப் பாய்ச்சுதல் வேண்டும், என்பது கல்வி நீராலன்றி ஊன்றப் பெற்ற வித்து வளர்தற் கியலாதாகலின் அது பாய்ச்சப் பெறுதல் இன்றியமையாதாம் என்க. கற்பு-கல்வி, மனத்தின் வாங்கு ஆற்றலையே நினைவு என்கிறோம். அவ் வாங்கு ஆற்றல் கருவும் திருவும் எய்தி மெய்யறிவென்னும் பயிராக வளர்ந்து பெருகுதற்குக் கல்வி என்னும் நீர் பாய்ச்சப் பெறுதல் வேண்டும் என்பது வலியுறுத்தப் பெற்றது.
இனி, உழுதலும், நீரிடுதலும் ஆகிய பின்னைக் காப்பும் தேவையாகலின், ஒழுகு, நாண், நட்பு, உரன் ஆய இவை நான்குபுறமும் சூழப்பெறும் காப்பீடாகக் குறிக்கப் பெற்றன.
மெய்யறிவு வேணாண்மைக்கு ஒப்புரவாண்மை, அன்புடைமை, அறமுடைமை, நடுவுநிலைமை, பொச்சாவாமை, புறங்கூறாமை, பொய்யாமை, முதலிய கூறுபாடுகளின் கடைப்பிடிப்பாகிய ஒழுங்கும், அறிவு, மனம், சொல், வினை முதலியவற்றின்கண் சேரும் குற்றங்களுக்கும் அவை மேல்வரும் பழி கரிசுகட்கும் உயிர் நடுங்குதலாகிய நாணமும், அன்பு, அறிவு, இன்பு, பண்பு ஆகியவற்றிற் பொருந்தியாரது நட்பும், துன்பிற்றுவளாமை, இன்பிற் கெதிரேறல் சூழ்விற் கொளிந்துய்தல், பகைவர் உளம் வேறல் முதலியவற்றிற்காய மனவுரனும் நான்கு புறத்தும் அமைக்கப் பெறும் வேலிகளாம் என்க.
ஐய! - என்று விளித்தது தலைவனாகிய இறைவனை.
நீ பயந்த வாணாள் தாயம்: நீ அருளிய வாழ் நாள் என்னும் உரிமைக் காலம் பயந்தது-பயத்தது-பயன் பெறத் தந்தது.
உயிர்கள் பயன் பெறும்படி தந்த உரிமைக் காலமாகிய இவ் வாழ்நாளில் செய்ய வேண்டுவன யாவை என்பனவற்றைக் குறித்ததாம் இப்பாட்டு.
தாயம்-உரிமை. இது தாய் வழியாக முதன் முதல் பெறப்பட்டதாகலின் இப்பெயர் பெற்றது. உலகின் மாந்த நாகரிகத்தின் முந்தைய உரிமை தாயுரிமையே ஆகலானும், தமிழர் மாந்த இனத்தின் தொடக்க நாகரிகத்தார் ஆகலானும், 'தாயம்' முதலிய தாய் முதல் குறித்த சொற்கள் தமிழ் மொழிக்கு நிறைந்த வழக்காதல் காண்க
தாயம் உரிமை உரிமையுள்ள நிலம்-உரிமை பெற்ற நாடு-உரிமை பெறு சுற்றம்-முன்னைய வைப்பு-உரிமையால் பெறும் மேலாண்மை-பொருள் பயன்-ஈகம் ஈகை, அடைக்கலம் முதலிய சொற் பொருட்களையும், தாயதி, தாயத்தார், தாயேடு, தாயோலை, (மூல ஏடு), தாய்க்கால், தாய்க்கட்டு, தாய்க்கண், தாய்க்காணி, தாய்க்கிழங்கு, தாய்க்கழகம், தாய்ச்சீட்டு, தாய்ச்சீலை (கோவணம்), தாய்ச்சுவர், தாய்ப்பாளை, தாய்முதல், தாய்வழி, தாய்வேர் முதலிய தலைமைப் பொருள் கொண்ட எண்ணிறந்த சொற்களையும் ஓர்ந்துணர்க.
தந்தை பெயரை முன்னடையாப் பெற்றுத் தலைமைப் பொருளும் உரிமைப் பொருளும் தரும் சொற்கள் தமிழில் இல்லாமையே, தமிழின் முன்மையையும் பிற மொழிகளின் பின்மையையும் தெளிவாகக் காட்டுவனவாம்.
வையசம் :சகடம்-வண்டி-உருளை-உருளை போல் உருள்வதால் உலகம்.
இவ்வுலக உயிர்கள் உய்தல் வேண்டிச் செய்யப் பெறும் மெய்யறிவு வேளாண்மை என்று குறிக்கப் பெற்றதென்க.
அயர்வின்றி -அயர்ச்சி யின்றி.
மெய்யின் வினைபுகு உணர்வேம் : மெய்ம்மையின் வேளாண்மையைச் செய்யப் புகுந்த உள்ளுணர்வுடையேம். நிலத்துக்கண் பயிரும், புலத்துக்கண் அறிவும் விளைவிக்கும் முயற்சியே மாந்த உயிர்களுக்கிட்ட வாழ்வு நோக்கமாம் என்றும், அந் நோக்கம் நடைபெறத் துணைபுரிவதே மெய்யறிவினார்க்கிட்ட இறைக் கட்டளையாம் என்பதும் உணர்த்தப் பெற்றன.
செய்யன் முற்றும் நின் அளி அன்றே! - மெய்யுணர்வுடையார் செய்யும் முயற்சியும் அம்முயற்சியின் பயனும் நின் ஊக்கமும், விளைவுமே யாகுமன்றி அவர்தம் விளைவன்று என்பது கூறப்பெற்றது. கருவிகளும் அக் கருவிகளுக்கமைந்த கரணியங்களும் அக்கருவி, கரணியம் இரண்டாலும் விளைந்த கருமங்களும் அக் கருமங்களின் பயனும் அவற்றிற்கு உரிமை நல்கியவர்க்கே ஆகுமன்றி அவ்வினைப்பாடுகளுக்கு உறுப்பாக அமைந்தார்க்கு என்றும் ஆகா என்னும் உண்மை ஈண்டு விளக்கப் பெற்ற தென்க.
பயன் கருதாத உயிர்த் தொண்டே அறிவின் பயனாம் என்பதும் அவ்வறிவு விளைவுக்குக் கல்வி முதலிய முயற்சிகளில் ஈடுபடுவதே என்றும் செயத் தக்கதென்பதும் உரைக்கப் பெற்றன.
இப்பாட்டு புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சியென் துறையுமாகும்.