பக்கம்:அகமும் புறமும்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட உண்மைகள் • 347


வாழ்வில் பல வகை அனுபவம்

இனி, இப்புகழ் யாரைத்தேடிச் சென்று அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற உண்மையை அறிந்து தங்கள் கடமையைச் சரிவரச் செய்துகொண்டு வாழ்க்கையையும் நன்கு அனுபவித்துக்கொண்டு இருக்கும் பெரியோர்களையே புகழ் தேடிச்சென்று அடைகிறது. வாழ்க்கை வேண்டும்பொழுது நமது விருப்பம் போலக் கிடைக்கும் ஒரு கருவியன்று. அது உள்ளபொழுதே அதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஏதோ ஒன்றின் மேற்கொண்ட பற்றுக் காரணமாக அதனையே செய்துகொண்டு வாணாளைக் கழித்துவிடின், அதுவும் பயனற்ற வாழ்க்கையேயாம். எல்லாவகை அனுபவங்களும் வாழ்க்கையில் வேண்டுவனவே. எனவே, போரே பெரிது எனக்கருதி வாழும் மன்னன் ஒருவனை விளித்துப் பழந்தமிழ்ப் புலவர் ஒருவர் அறவுரை பகர்கின்றார். போர் செய்வது அரசனுக்குரிய கடமையாயினும், அதையே வாழ்க்கையின் பயன் என்று மன்னன் கருதி வாழ்வானாயின், அது மடமையன்றோ? எனவே, புலவர்; ‘வாழ்க்கை வாழ்வதற்கே,’ என்று மன்னனுக்கு நினைவூட்டுகிறார்.

ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
ஆங்கினிது ஒழுகுமதி பெரும! ஆங்கது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப. (புறம்–24)

என்று மாங்குடி கிழார் என்ற புலவர் கூறுகிறார்; போரே செய்யும் ஒருவனை நோக்கி, “தேறல் மடுத்து மகிழ் சிறந்து வாழ்வாயாக! அதுவே வாழ்க்கை வாழ்வதாகும்; அதுவே புகழுடன் வாழ்வதற்கும் வழியாகும்” என்று கூறுகிறார். இவ்வொரு கவிதை நமக்கு ஒரு பேருண்மையை அறிவுறுத்துகிறது. வாழ்க்கை, கேவலம் ஒரே வகையில் மூடியணியப் பெற்ற குதிரை போலச் செலுத்தப்