பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/226

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

அணுவின் ஆக்கம்


ஒரு பகுதியிலுள்ள உயிரணுக்கள் மட்டிலும் கட்டுக் கடங்காமல் பெருகி விடுகின்றன. இதனால் அப்பகுதியில் ஆறாத புண்தோன்றி நோயாளியை உயிருடன் கொல்லும் நிலைமை ஏற்படுகின்றது. உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுத்து அவற்றை அழிக்கும் தன்மை வாய்ந்த கதிரியக்கக் கதிர்கள் புற்று நோய் அணுக்களை அழிக்கப் பயன்படுகின்றன. புற்று நோயை விளைக்கும் காரணத்தைக் கண்டறியவும், அதற்கேற்ற சிகிச்சையைத் தெரிந்துகொள்ளவும் ஆண்டுதோறும் அமெரிக்காவில் கோடிக்கணக்கான டாலர் செலவழிக்கப் பெறுகின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் - ஆடவரும் மகளிரும் தங்கள் முழுநேரத்தையும் இதில் பயன்படுத்திப் பாடுபடுகின்றனர்.

புற்றுநோயை ஒழிப்பதற்கு முதன் முதலில் புதிர்க் கதிர்களைப் பயன்படுத்தினர். சில வகைப் புற்றுக்களில் இவை பயன்பட வழியில்லை. உடலின் ஆழத்தில் மறைந்திருந்து கொல்லும் புற்றை இக்கதிர்கள் அடைய முடியாது. எனவே, இத்தகைய சமயங்களில் இக்கதிர்களைவிட வன்மைவாய்ந்த கதிரியக்கக் கதிர்களைக் கையாளுகின்றனர். உடலின் வெளிப்புறத்தே காணும் புற்றை அழிப்பதற்கு அதன் அருகே ரேடியம் வைக்கப்பெறுகின்றது. அந்த ரேடியம் உமிழும் கதிர்கள் புற்றிலுள்ள உயிரணுக்களைத் தாக்கி அவற்றை அழிக்கின்றன. உடலின் உட் புறமாகவுள்ள புற்றைக் கட்டுப்படுத்த மிகச் சிறிய அளவு ரேடியத்தைக் கொண்ட ஓர் ஊசி அப் பகுதியில் செருகி வைக்கப்பெறுகின்றது. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் புற்றை வேண்டிய அளவு தாக்கியபின் ஊசியை வெளியே அகற்றிவிடலாம். இவ்வாறு புற்றுநோயைக் குணப்படுத்தும் முறையைக் ‘கதிரியக்கச் சிகிச்சை[1] ’ என்று வழங்குவர்.

இம்முறையில் தவிர்க்க முடியாத பெருங்குறை ஒன்று உண்டு. ரேடியத்திலிருந்துவரும் கதிர்களை அளவறிந்து கட்டுப்படுத்துவது இயலாததொன்று. ரேடிய மருத்துவர்[2]


  1. 30. கதிரியக்கச் சிகிச்சை - radioactive treatment.
  2. 31. ரேடிய மருத்துவர் - radiologist.