பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றல்

41



குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்,

கூட்டி வைத்துப் பல நலந் துய்த்தனை!

புலத்தை யிட்டிங் குயிர்கள்செய் தாய், அன்னே ! போற்றி! போற்றி ! நினதருள் போற்றியே !

என்று ‘மகா சக்திக்கு’ வாழ்த்து கூறுகிறார் மகாகவி. நாம் செய்துவரும் ஒவ்வொரு வேலையையும் கவனித்து அறிஞர்கள் ஆற்றல்களை நான்குவகையாகப் பிரித்துள்ளனர். அவற்றை ஈண்டு ஒரு சிறிது நோக்குவோம்.

பூகவர் விசை : முதலாவது ஆற்றல் பூகவர் விசை என்பது. இப் பிரபஞ்சத்திலுள்ள[1] ஒவ்வொரு பொருளும் பிற பொருள்களைக் கவர்கின்றது. பூகவர் விசை என்னும் ஆற்றல் பொருள்களின் நிறைக்கேற்றவாறு மாறுபடுகின்றது. இப்புவியின் நிறை அதன் மேற்பரப்பிலுள்ள எல்லாப் பொருள்களின் நிறைகளை விட மிகப் பெரிதாகலின், அவையாவும் பூமியினால் ஈர்க்கப் பெறுகின்றன. நாம் ஆற்றும் ஒவ்வொரு வினையிலும் இவ்விசை குறுக்கிடுகிறது. நாம் மேல் வீட்டுக்கு ஏறிப் போக வேண்டுமானால், நம்மைக் கீழ்நோக்கி ஈர்க்கும் கவர்ச்சி ஆற்றலுக்கு மீறிச் செயலாற்ற வேண்டும். வானவூர்தியில் பறக்கவேண்டுமானாலும் பூமியின் கவர்ச்சிஆற்றலை மீறியே வினையாற்ற வேண்டும்.

பெளதிக இயலில் ஆற்றலை அளக்கும் முறையினை அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆற்றலைச் செலுத்தி ஒரு பயனே அடைவதையெல்லாம் வேலை அல்லது வினை[2] என்று குறிப்பிடுவர். வினை என்பது இயக்கம் பெற்ற ஆற்றலின் குறியீடு. ஓர் இராத்தல் எடையை பூகவர் விசையை மீறி ஓர் அடி உயரம் தூக்குவதற்குச் செய்யவேண்டிய வேலைதான் இந்த அளவின் அலகு[3] . இதனை இராத்தலடி[4] என்று வழங்குவர். ஒரு கிடங்கு வெட்டி 2000 இராத்-


  1. பிரபஞ்சம் - universe.
  2. வேலை அல்லது வினை - works
  3. அலகு - unit
  4. இராத்தலடி - foot pound.