பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அதிகமான் நெடுமான் அஞ்சி

பார்த்துக் கொல்லிக் கூற்றத்தின் மேல் படையெடுத்துச் செல்லலாமென்று இருக்கிறேன். அப்போது உம்முடைய உதவி வேண்டியிருக்கும்” என்றான்.

காரி புன்முறுவல் பூத்தான்.

“ஏன்? நான் கூறியது தக்கதாகத் தோன்றவில்லையோ?” என்று கேட்டான் சேரமான்.

“அப்படி எண்ணவில்லை. ஓரி மிகச் சிறியவன். காலில் தைத்த முள்ளையெடுக்கக் கோடரியை வீச வேண்டுமா? மன்னர்பிரான் திருவுள்ளத்தை நான் அறிந்து கொண்டேன். என்னுடைய படையோடு நான் சென்று பொருதால் இரண்டு நாளைக்கு அவன் நிற்கமாட்டான்.”

“ஒருகால் அதிகமான் அவன் துணைக்கு வந்தால்-?”

“ஓரிக்கும் அதிகமானுக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஒருகால் சேரநாட்டுப்படை சென்று தாக்கினால் அவன் இது தான் சமயம் என்று போருக்கு எழுந்தாலும் எழலாம். நான் தாக்கினால் அவன் கவலைகொள்ள மாட்டான்.”

“சரி; உமக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அதையே செய்யலாம்” என்று சேரன் காரியின் கருத்துக்கு உடம்பட்டான்.

காரி விடை பெற்றுத் திருக்கோவலூருக்கு வந்து போருக்கு ஆவனவற்றைச் செய்தான். ‘கொல்லிக் கூற்றத்தைச் சேரமானுக்குக் கொடுத்தால், அவனுக்கு அடங்கிய வேளாக ஆட்சி புரியலாம்; இல்லையானால் போருக்கு வருக’ என்று கூறிக் காரி ஓரிக்குத் தூது போக்கினான். நெடுங்காலமாக உரிமை வாழ்வு வாழ்ந்தவனுக்கு ஒருவனுக்கு அடங்கி வாழ மனம் வருமா? அவன் உடம்படவில்லை.

காரி போர் முரசு கொட்டிவிட்டான். தன் படைகளை வகுத்து ஓரியின் நகரை முற்றுகையிட்டான்.