பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/103

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

82 || --- அப்பாத்துரையம் - 16 போது வச்சிரநாட்டு மன்னன் முத்துப்பந்தரும். மகத வேந்தன் பட்டிமண்டபமும், அவந்திவேந்தன் தோரணவாயிலும் திறையாக அல்லது வெற்றிப்பரிசாக அளிக்க, அவற்றுடன் கரிகாலன் புகார் நகருக்கு மீண்டான். இங்கே குறிப்பிட்ட, வச்சிர, மகத, அவந்தி வேந்தர்கள் கரிகாலன் எதிரிகளாகத் தோன்றவில்லை. அவர்கள் அவன் பெருவெற்றிகள் கண்டு மதித்து அவன் மேலாட்சியை உவந்து ஏற்றநேய அரசர்கள் என்றே தோன்றுகிறது. இந்த மூவரசர்களும் மோரியர் காலத்துக்குப் பின் குப்தர் காலம் வரை பெரிதும் தமிழகத்துடன் நேசம் பாராட்டித் தம்மை வடதிசையில் வலிமை யுள்ளவர்களாக்கிக் கொள்ள விரும்பியவர்கள் என்னலாம். குப்தர் காலத்தில் எழுந்த வடதிசைப் பகைமை பெருஞ் சோழர் வெற்றியின் பின் மீண்டும் மாறி நேசத் தொடர்பு வளர்ந்தது காண்கின்றோம்.

வடகிழக்குத் தெற்கு சார்ந்த இந்தப் படையெடுப்பும் நேசமும் அடிக்கடி இவ்விரு திசைகளிடையே இருந்த சரிசம அரசியல் போட்டியையும், அதே சமயம் பண்பாட்டு நேசத்தையும் விளக்குவதாகும். முற்காலத்தில் புத்த சமயமும் பிற்காலத்தில் தமிழர் நாகரிகமும் பெரிதும் பரவிய வடதிசை இதுவேயாகும்.

கரிகால் வளவன் பிற்காலப் புகழ் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்குக் கரிகாலன் பதினாறு இலட்சம் பொன் பரிசளித்தான் என்ற செய்தி.

"தழுவு செந்தமிழ்ப் பரிசில் பாணர்போன் பத்தொடாறு நூறாயிரம் பெறப் பண்டு பட்டினப்பாலை கொண்டதும்" (கலிங்கத்துப்பரணி)

இதே நூல் அவன் இமய மலையைச் செண்டு அதாவது கைத்தடியால் அடித்து, பம்பரம் போல் திருகிவைத்து இருபுறமும் புலி பொறித்த செய்தியை உயர்வு நவிற்சியணி நயம் தோன்ற உரைக்கிறது.