பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகப்புரை

வடதிசை நாகரிகமாகிய அரை இருளும், மேலை நாகரிக மாகிய அரை யொளியுமே இன்றைய தமிழரால் - கற்றறிந்த தமிழரால் கூட-ஒளியாகக் கொண்டு பின்பற்றப்படுகின்றன. வருங்கால உலகம் பெறவேண்டும் முற்றொளிக்கு இவை படிகள் என்பதில் ஐயமில்லை. ஆனால், தமிழக அளவில் இந்த அரையிருள், அரை ஒளிகளைவிட, முற்காலத் தமிழகத்தின் முழுநிலவொளி அவ்வருங்கால முழுக் கதிரொளி காணும் வகையில் இன்னும் உயர்ந்த படியாக உதவுவது ஆகும். வடதிசை நாகரிகத்தையும் மேலை நாகரிகத்தையும் சரியான முறையில் நாம் பயன்படுத்துவதானால், அவை முற்காலத் தமிழர் நில வொளிக்கும் வருங்கால உலகின் கதிரொளிக்கும் இட்டுச் செல்லும் மேல்திசை, பண்டைத் தமிழகம், வருங்கால உலகம் என்ற படிகளைத் தலை கீழாக்கி இடைக்கால வடதிசையின் பிற்போக்கு வழியில் சறுக்குவதே இன்றைய இந்திய மாநில ஆட்சிக்கும், மாநில நாகரிகத்துக்கும் உரிய ஒரு பெரிய மாய இடராக உள்ளது. மேலை நாகரிகத்தை அயல் நாகரிகமாகவும், வடதிசை அடிமை இருட்கால நாகரிகத்தை அக உரிமை நாகரிகமாகவும் கொள்ளும் வடதிசையின் இன்றைய போக்குத் தமிழரை மட்டுமன்றி உலகையும் இருளை நோக்கியே இட்டுச் சென்று வருகிறது.

தமிழக வரலாறு, தமிழகப் பண்பாடு, தமிழக இலக்கியம் ஆகியவற்றின் ஆராய்ச்சி இன்றும் தமிழகத்திலேயே ஆட்சியாளர் பத்திரிகைகள், கல்வி நிலையங்கள், கல்லூரி, பல் கலைக்கழகங்கள் ஆகியவை அக்கரை கொள்ளாத, கண்ணெடுத்தும் பாராத துறைகளாய் உள்ளன. உலக வரலாறுகூட, பள்ளி கல்லூரிகள் பற்றிய மட்டில் இன்னும் ஒன்றிரண்டு மேலை நாடுகளின் ஆதிக்க வேட்டை வரலாறாக உள்ளதேயன்றி, 'ஓருலக' இனவரலாறாகக் கருத்துருவாகவில்லை. அக்குறிக்கோளை 'ஒருலக அவை' (ஐக்கிய