பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16||- --- அப்பாத்துரையம் - 16

வரவேற்கத்தக்கவையே, ஏற்றுக் கொள்ளத் தக்கவையே. ஆனால், புறநானூற்றில் அவர் கொண்டுள்ள மட்டுமீறிய ஆர்வத்தால் அவர் அப்புகழ்மிக்க வீரத்தின் தேய்வு நலிவுகளை மட்டுமே தமிழினத்திலும், அதன் வரலாற்றிலும் காணமுடிகிறது. தேய்விடையே புதுத்தளிர்விட்டு நலிவிடையே வளரத் தொடங்கியுள்ள புது மலர்ச்சியை அவர் காணவில்லை என்பது தெளிவு. ஏனெனில், தமிழின வரலாற்றிலே நாம் இந்த வீரத்தின் தேய்வைமட்டுமல்ல, அதன் புதுவளர்ச்சியையும் காணலாம்.

புறநானூற்று வீரம், இலக்கிய வீரம் மட்டுமன்று. வாழ்க்கை யில் தழைத்து இலக்கியத்தில் கனிந்த வீரமே! மதுரைக் காஞ்சி மூலம் அதுவே தலையாலங்கானத்துப் பெரும் போர் வெற்றியாகி இலக்கியத்திலும் வாழ்விலும் மலரக்காண்கிறோம். இப்புகழை இமயம்வரை கொண்டு செல்கிறது, சிலம்புச் செல்வம். இதனை அடுத்து, முத்தொள்ளாயிரத்தில் தமிழில் முன்னோ பின்னோ என்றுமில்லாத வகையில் அது பின்னும் இன்னிலா வொளிபூத்து முறுவலிக்கக் காண்கிறோம். சோழப் பேரரசர் காலத்தில் அது இலக்கியத்தில் மூவருலாவாகவும், கலிங்கத்துப் பரணியாகவும் புதுமுகையவிழக் காண்கிறோம். இவை இலக்கிய முகைகள் மட்டுமல்ல. வங்கம், கலிங்கம், கடாரம் ஆகிய நாடுகள் அப்புது வீரகாவியங்களால் அதிர்வுற்றன. அவற்றிலிருந்து எழுந்த வீர அலைகள் அராபிக் கடலில் மாலத்தீவுகள் என்னும் பழந்தீவுகள் பன்னீராயிரத்தையும், வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் என்னும் மாநக்கவாரத் தீவுகளையும் அலைக்கழித்தன.

சோழப் பேரரசைவிட எல்லையில் குறைந்தாலும் வீர தீரத்தில் குறைந்ததல்ல, பிற்காலப் பாண்டியப் பேரரசு! மேலும் செல்வ நிலையில் அது சோழப் பேரரசையும் விஞ்சியிருந்தது என்பதை வெளிநாட்டார் குறிப்புகளே தெரிவிக்கின்றன. முன் என்றும் இல்லாவகையில், அந்நாளைய வரலாற்றாசிரியர் தமிழகத்தைப் பெரிய இந்தியா என்றும், சிந்து கங்கைப் பரப்பைச் சிறிய இந்தியா என்றும் அழைத்திருந்தனர். தமிழகத்தின் இவ்வீரவாழ்வும், கீழ்த்திசை உலகின் விடுதலை வாழ்வும்