பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 - அப்பாத்துரையம் - 16

குறிச்சியின் புகழ் நின்று நிலவிற்று. அது மட்டுமன்று. அவர் அருகிலே, அவர் காலத்திலேதான், புதிய வீர சோதியாக வ.உ.சிதம்பரனாரின் புத்தியக்கம் பழம் புகழ் புதுக்கிற்று. அவர் காலத்திலேதான் திருப்பூர்க்குமரன் புறநானூற்று வீரத்துக்கு ஒரு புத்துருத் தந்தான். ஆனால், இவற்றையெல்லாம் காண முடியாத நிலையில் வையாபுரி போன்றோரின் இலக்கிய மரபு வேறாகவும், திருப்பூர்க்குமரன் வீரமரபு வேறாகவும் தமிழகத்தில் பிரிவுற்று இயங்கின. ஆனால், கவிஞர் பாரதி மீண்டும் தமிழகத்தின் இரு மரபுகளையும் தம் கவிதையில் இணைத்துப் புதிய விடி வெள்ளியாக ஒளி வீசியுள்ளார். அயலாட்சிகளிலும், அயற் பண்புகளிலும் குளிர்காய்ந்த வையாபுரி போன்றாரின் இலக்கிய மரபு பாரதியார் கவிதையைப் போற்றிற்று.ஆனால், அக் கவிதையிலே புதிதாகத் தளிர்விட்டுப் பொலியத் தொடங்கி விட்ட இந்தப் புதிய மெய்ம்மையை அது காணவில்லை.

புறநானூற்றுக் கால வீரம் இன்னும் தமிழரிடையே இருக்கிறது; அக்கால அறிவும் இருக்கிறது; கலையும் இருக்கிறது. ஆனால், இவற்றின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்குரிய விடுதலை யுரிமையாட்சியும், ஒன்றுபட்ட இன எழுச்சியும்,மரபொற்றுமையும் தான் நம்மிடையே இல்லை. தமிழர் வீரமரபை இன்று தமிழர் அறிவு மரபு அடக்கி ஒடுக்கி அமிழ்த்திக் கங்காணி மரபாய் இயங்குகிறது. தமிழர் கலைமரபு இன்னும் பெரிதும் அயல் மொழி, அயல் இன ஆட்சிகளுக்குப் பரிந்து முன்னின்று உழைக்கும் நிலையிலேயே உள்ளது. தமிழர் ஆட்சியோ, தமிழ் ஆட்சியாகவும் அமையாமல், தமிழர் உரிமைக் குரல் எழுப்பும் ஆட்சியாகவும் அமையாமல், கடமைக் குரல் மட்டும் எழுப்பும் அடிமை ஆட்சியாகவே நிலவுகிறது.

வீரமரபில் வந்து அறிவும் கலையும் வளர்த்த தமிழர் மீண்டும் வீரம் வளர்த்த பின்னரே, தம் அறிவையும் தம் கலையையும் தமக்குப் பயன்படும் உயிர் அறிவாகவும், உயிர்க்கலையாகவும் வளர்க்க முடியும். தமிழர் போர்க்களங்களின் வரலாறு, தமிழ் மரபின் உயிர் வரலாற்றை அவர்கள் கண்முன் கொண்டு வருவதுடன், அவ்வீர மரபை வளர்க்கவும் உதவும் என்பது உறுதி.