பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 97

சரித்திரமென்றும் யாவரால் எழுதப்பட்டனவென்றுந் தாங்களே கண்டு தெளிந்துக்கொள்ளலாம்.

- 7:33; சனவரி 21, 1914 -
 

125. கடிதநேயர்களுக்கறிக்கை

அன்பர்காள்! நமது பத்திரிகைக்கெழுதுங் கடிதங்கள் யாவும் பலருக்குபகாரமாகவும் அவ்வவர் சந்தேகந் தெளிந்து நன்மார்க்கத்தைப் பின்பற்றுவதாகவும் அறிவின் விருத்தி பெற்று உலகத்தில் சகசீவிகளாக உலாவுவனவாகவும் விவசாய விருத்தி பெற்று சருவ சீவர்களையும் ஆதரிப்பனவாகவும், வித்தியாவிருத்திப் பெற்று தேசத்தை சிறப்பிப்பனவாகவுமிருக்குமேல் சகல மக்கள் முன்னேற்றத்திற்கும் சுதானந்தத்திற்கும் நிலையுண்டாம்.
அங்ஙனமின்றி ஓயாக்குடியர்கள் கடிதங்களுக்கும், தீராக்கோபிகள் கடிதங்களுக்கும், மாறா வஞ்ஞானிகள் கடிதங்களுக்கும், மதகர்வமே மாலையாகப் பூண்டுள்ள மந்தமதியோர் கடிதங்களுக்கும் மாறுத்திர மெழுதுவதாயின் வீணாய கலகத்திற்கும் மனத்தாங்கலுக்குமே துண்டாமன்றி ஏனையோருக்கு யாதொரு பயனுந்தராவாம். ஆதலின் அறிவிலிகளின் கடிதங்களுக்கு பிறிதொரு மாறுத்திரமும் வரையாதிருக்க வேண்டுகிறோம்.

-7:33; சனவரி 21, 1914 -
 

126. சுகுணமும் அசுகுணமும்

வினா : நமது தேசத்தோர் யாதோர் காரியத்திற்கேனும் புறப்படுங்கால் பாப்பான் எதிரில் வந்தான் கைம்பெண் எதிரில் வந்தாள் அதனால் சகுனங்கெட்ட சகுனம். அக்காரியத்திற்குப் போகலாகாதென நின்று விடுகின்றார்களே அதன் விவரமென்ன.

கோ, பார்த்தசாரதி, வேலூர்.

விடை : அன்பரே ! சுகுணத்தோடு செல்லுவோருக்கு சகுனம் வேண்டுவதில்லை. அசுகுணத்தோருக்கே சகுனம் வேண்டும். பாப்பானென்னும் வேஷத்தையும் கைம்பெண்ணென்னும் வேஷத்தையும் நமது தேசத்தோரே உண்டு செய்து வைத்துக்கொண்டார்கள். அவை யாதென்னிலோ ஓர் மனிதன் காடாவேஷ்டியைக் கீழ்ப்பாச்சாகத் தொங்க விட்டுக் கட்டிக்கொண்டு மார்பில் முப்பிரி நூலணைந்து குடிமி வைத்து குறுக்குப்பூச்சு நெடுக்கப்பூச்சு ஏதேனும் ஒன்றைப் பூசி தருப்பைப் புல்லையேனும் பஞ்சாங்கத்தையேனும் ஓர் சொம்பையேனுங் கையிலேந்தி வெளி வருவானாயின் அவன் பெயரைப் பாப்பானென்றும் ஓர் பெண்ணிற்கு நகை முதலிய வாபரணங்களை அணையவிடாமலும் மஞ்சள் குங்குமம் பூசவிடாமலும் வெள்ளை வஸ்திரங் கட்ட வைத்து தலைமயிரை சீவ விடாதேனும் மொட்டையடித்தேனும் விட்டுவிடுவார்கள். அவள் வீதியில் வருவாளாயின் அவளுக்குப் பெயர் கைம்பெண், இவ்வகையாக நமது தேசத்தோரே இவன் பாப்பான் இவள் கைம்பெண்ணென்னும் வேஷத்தை வகுத்துவிட்டு பாப்பான் வந்தால் கெட்ட சகுனம் கைம்பெண் வந்தால் கெட்ட சகுனமென்பதாயின் அவை யாருடைய சுகுணமென்று தாமே தெரிந்துக்கொள்ளலாம், ஐரோப்பிய புருஷர்களேனும் மகமதிய புருஷர்களேனும் சீன புருஷர்களேனும் பர்மிய புருஷர்களேனும் எதிரில் வருவார்களாயின் பாப்பானென்னும் ஏதொரு சகுனமுங் கூறுவரோ ஐரோப்பியப் பெண்களேனும் மகமதியப் பெண்களேனும் சீனபெண்களேனும் பர்மிய பெண்களேனும் எதிரில் வருவார்களாயின் கைம்பெண்ணென்னும் ஏதொரு சகுனமுங் கூறுவரோ கூறவே மாட்டார்கள். காரணம் அவர்களுக்குள் பாப்பான் வேஷமுங் கிடையாது கைம்பெண் வேஷமுங் கிடையாது. ஆதலின் நமது தேசத்தோர் செயல்களில் அனந்தங் கேடுகளை உண்டு செய்துக் கொண்டிருக்கின்றார்கள். அவைகள் யாவையும் ஆய்ந்து சுகுணத்தை ஏற்று அசுகுணத்தை அகற்றவேண்டியதே அழகாம்.

-7:37; பிப்ரவரி 18, 1914 -