பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு


23. கோலார் மாரிகுப்பம் சோதிரர்காள்

சற்று கவனியுங்கள். கஸ்தூரி பாண்டத்தைத் திறந்தால் நல்மணம் வீசும், மலபாண்டத்தைத் திறந்தால் துன் நாற்றம் வீசும். அதுபோல் மேன்மக்களாகிய விவேகிகள் தங்கள் நாவைத்திறப்பார் களானால் சகலர் செவிக்கும் இன்பத்தை ஊட்டிக் களிக்கச் செய்வார்கள். விவேகிகளும் மெச்சுவார்கள்..

கீழ்மக்களாகிய அவிவேகிகள் தங்கள் நாவைத் திறப்பார்களானால் நீச்சவார்த்தைகளைப் பேசி நீச்சச்செய்கைகளால் நடித்து விவேகிகளை தூஷிப்பதே தங்கட் செய்கையாகக்காட்டி அவிவேகிகளை ஆனந்திக்கச் செய்வார்கள். .


ஆதலின் நமது சத்தியதன்மப் பிரியர்கள் அசத்தியர்களாகும் அவிவேகி களின் கூட்டத்திற் கேகாமலும், அவர்கள் நீச்சவார்த்தைகளை செவிகளிற் கேளாமலிருப்பதே உத்தமமாகும். அவர்களின் நீச்சக்குடும்பச் செயலைத் தெரிந்துக்கொள்ள வேண்டுமாயின் நூதனப்பணம் படைத்துள்ள கர்வத்தினாலும், நூதனக் கல்விக் கற்றுக்கொண்ட செருக்கினாலு மறிந்து கொள்ளலாம்.

விவேகசிந்தாமணி

பொல்லார்க்குக் கவ்விவரில் கர்வமுண்டாம் / அதனோடு பொருளுஞ் சேர்ந்தால்
சொல்லாதுஞ் சொல்லவைக்குஞ் / சொற்சென்றால்குடி கெடுக்கத் துணிவர் கண்டாய்
நல்லோர்க்கிம் மூன்றுகுண முண்டாயின் / அருளதிக ஞானமுண்டாய்
எல்லோர்க்கும் உபகாரராயிருந்து / பரகதிவை யெய்துவாரே.

நாலடி நானூறு

கூர்த்து நாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயாற்
பேர்த்து நாய் கௌவினா நீங்கில்லை-நீர்த்தன்றி
கீழ்மக்கட் கீழாய் சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்க டம்வாயான் மீண்டு.

- 2:24. நவம்பர் 25, 1908 -

24. இரங்கூன் முநிசபில் சங்கமும் இராயபாதூர் மதுரைப்பிள்ளையவர்களும்

பிரமதேசமென்று வழங்கும் இரங்கூன் பதியில் சென்ற பதினாறு வருடகாலமாக முநிசபில் கமிஷனர் அலுவலை நடத்திவந்த ஆனரெரி மாஜிஸ்டிரெட்டும், இராயபா தூரவர்களுமாகிய ஸ்ரீமான் - பெ.மா. மதுரைப் பிள்ளையவர்களை இவ்வருஷத்திய முநிசபில் நியமனத்திலுங், கமிஷனராக வேற்றுக்கொண்ட சங்கதியைக் கேழ்வியுற்று மிக்க ஆனந்தம் கொண்டோம். அந்த ரங்கோன்பதியில் எத்தனையோ வித்தியாபுருஷர்களும், தனவந்தர்களு மிருந்தும் இக்கனவானையே கமிஷனராக ஏற்றுக்கொள்ளுங் காரணம் யாதென்பீரேல், அவருக்குள்ள வித்தையும், புத்தியும், ஈகையும், அன்பும், பரோபகார சிந்தையுமேயாகும்.

-2:25; டிசம்பர் 2, 1908 -

25. அரைக்கல்லி முழுமொட்டை

அதாவது புறாக்களுக்குள்ள விசையிறகுகளுக்குக் கல்லியென்று பெயர். அஃது அரபி மொழி. அக்கல்லி அரைபாகம் வளர்ந்துவருங்கால் முழு இறகுகளையும் மொட்டையடித்திருக்குமாயின் அக்கல்லியின் விசையும், அம்மொழியும் ஏதேனும் பலனைத் தருமோ ஓர்பலனு மில்லையென்பதேயாம்.

அதுபோல் நமது தேசத்தோர் பெரியசாதி பெரியசாதியென்று கூறிவருபவற்றுள் மனிதருக்குள்ள பெரியசாதியென்னும் மணமும், அதன் செயலும் ஈதென்று விளங்கவில்லை. புனுகு பூனை சிறந்ததென்னு மொழிக்கு அதன் புட்டத்திலேனும் ஓர் மணமுண்டு. அதன் அவுடதப் போக்கால் சில ரோகிகளுக்குக் குணமுண்டு.

கஸ்தூரி மான்வயிற்றி லோர்கட்டியின் மணமுண்டு. அதன் அவுடதப் போக்கால் மக்களுக்கனந்த சுகமுண்டு.