பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு / 25


பெளத்தகுருக்களின் தேகத்தை தகனஞ் செய்ய எடுத்துக்கொண்டு போகுங்கால் சத்விஷய பாடல்களும், ஆனந்தக்கூத்துகளும், தன்மோப தேசங்களும், தன்மதானங்களுஞ் செய்துக்கொண்டே செல்லுவதை பர்மாதேசத்தில் நாளதுவரையிற் காணலாம்.

அத்தகைய சத்விஷயானந்தக் கூத்தாடி ஞானானந்தம் பெற்றிருந்த வித்தேசத்துக் குடிகள் அபுத்தர்களின் பொய்மதங்களுக்குட்பட்டு தங்கள் சுத்தசீலங்கள் யாவுங்கெட்டு பிணியாலும், மூப்பாலும் வாதைப்பட்டு மரணமடைந்ததேகத்தை எடுத்து செல்லுங்கால் கட், சாராயக் குடியாலும், அதன் வெரியாலும் தங்கள் கேட்டினிலையை உணராது விவேகிகள் அருவெறுக்கத்தக்க கூத்தாடுவதும், கலகத்தைப் பெருக்கிக் கொள்ளுவதும், அடிப்படுவதும், சிறைச்சாலையிலடைப்படுவதுமாகிய துக்கத்தை அனுபவித்து வருகின்றார்கள்.

சமணமுநிவர்களின் பிரேதத்தின் முன் கூத்தாடிச்செல்லுவது பூர்வ புத்தமார்க்கச் செயலாயிருப்பினும், புத்ததன்மம் மறைந்து அபுத்த தன்மஞ் சிறந்து பொய்யுங் களவுங் கொலையுங் குடியும் நிறைந்து விட்டபடியால் ஆனந்தக்கூத்து சதா துக்கக்கூத்தாக மாறிவிட்டது. இவற்றை நடவாது தடைசெய்வதே சுகமாம்.

- 3:30; சனவரி 5, 1910 -

38. ஜாதியின் கொடுமை

சமீபத்தில் காக்கினாடாவில் ஒரு எந்தரா ஸ்திரீ தன் குழவியுடன் ஜலங் கொண்டுவர ஒரு குழாய்க்குச் சென்றனள். அக்கால் ஒரு பொந்திலிய ஸ்திரீ அருகிலுள்ள வேறொரு குழாயில் ஜலம்பிடித்துக்கொண்டிருந்தாள். இருவரும் ஜலம்பிடித்துக் கொண்டு திரும்பும் போது எந்தரா ஸ்திரீயின் குழவி பொந்திலிய ஸ்திரீயினருகில் உராய்ந்து சென்றதாம். அக்குழவி பொந்திலிய ஸ்திரீயைத் தீண்டிவிட்டபடியால் ஜலத்தை ஊற்றிவிடவேண்டிய தாயிருக்க அவள் கோபா வேஷங்கொண்டு அக்குழவியின் மேல் குடத்திலிருந்த ஜலத்தை ஊற்றிவிட்டாள். குழந்தை நனைந்துவிட தாயானவள் குழவியை வீட்டுக்கு எடுத்துச்சென்று கோரோசன மாத்திரையை உள்ளுக்குக் கொடுத்தனள். குழவியோ ஒருநாளிருந்து உயிர் துறந்தது. பிரேதத்தை கோஷா ஆஸ்பத்திரியில் சோதிக்க மாத்திரையால் மரணம் நேர்ந்தது என்றனர். பிறகு முனிஸிபாலிட்டி ஆஸ்பத்திரியில் சோதிக்க அது திக்குமுக்கடைப்பால் மரணம் நேர்ந்ததென்று தீர்மானித்தார்களென ஒரு ஆங்கிலப் பத்திரிகையின் நிருபர் எழுதுகிறார்.

குழவி முகம்பாராது தீண்டாத தீட்டு மொருகேடோ
ஓர் குழந்தையானது பெரிய பெண்பிள்ளையைத் தீண்டிவிட அத்தீட்டை சகியாதவள் அக்குழந்தையின் பேரில் ஜலத்தைக்கொட்டி திக்கு முக்கிடச்செய்து மறுநாள் குழந்தை இறந்துவிட்டதாம்.

அந்தோ! உலகத்தில் இத்தகையத் தீண்டாத ஓர்சாதியும் இருக்குமா தீண்டிவிட்டதினால் குழந்தையைக் கொல்லத்தக்க ஜலத்தைக் கொட்டி கொல்லுங் கொடும்பாவியுமிருப்பாளா! இந்தியர் கண்டுபிடித்துவரும் ஆட்சரிய வித்தைகள் இதுதான் போலும். இவ்விடத்தில் தான் தீண்டுகிறவர்கள் யார் தீண்டாதவர்கள் யாரென்பதை ஆலோசிக்கவேண்டும்.

அதாவது தனது சிறு குழவியின்மீது ஒரு பெண்ணானவள் சலத்தைக் கொட்ட அதற்குக் கோபியாது வீட்டிற்கு எடுத்துக்கொண்டுபோய்க் குழந்தையைப் பரிகொடுத்தவளைத் தீண்டலாகாதா. அன்றேல் குழந்தையின் கை தன்மீது பட்டவுடன் ஜீவகாருண்யமின்றி அதன் சிரசில் நீரைக்கொட்டி திக்குமுக்கிடக் கொன்ற பாவியைத் தீண்டலாகாதா. இவற்றைக்கண்டறிந்து கூறக்கோறுகிறோம்.

- 3:30; சனவரி 5, 1910 -