பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

உபாத்தியாயர் தான் படிப்புக் கற்றுக்கொடுக்கும் விஷயத்தை மறந்து பிரீஸ்டை நோக்கி ஐயா நீங்களிந்த தாழ்ந்த சாதியாரிடஞ் சாப்பிடப்படாது இந்துக்கள் ஒட்டலிலேனும், பிராமணர்கள் ஓட்டலிலேனும் சாப்பிடுவது நல்லது; இவர்கள் மெத்தக் கேவல் சாதியார் இவர்கள் எங்களைக் கண்டவுடன் தூரவோடிப் போகின்றவர்கள் இந்த தேசத்தோர் யாவரும் இவர்களைக் கிட்டே சேர்க்கின்றது கிடையாது. நீங்களும் அப்படியே செய்யுங் கோளென்று சொல்லிக்கொண்டு வருங்கால் அவ்விடங் கேட்டுக் கொண்டிருந்த இன்னொரு தமிழர் உபாத்தியாயரை நோக்கி ஐயா, உங்களுடைய மிலேச்சசாதி புத்தியின்னும் உங்களைவிட்டு நீங்கவில்லையல்லவா, பிரிட்டிஷ் ஆட்சியால் எவ்வளவோ சீர்திருத்தங்களும், விவேக விருத்திகளும் உண்டாயிருந்தும் இத்தேசத்து பௌத்தர்கள் மீது வைத்திருந்த பொறாமெய் உங்களைவிட்டு நீங்கவில்லையல்லவா, உங்கள் செய்கைகளைவிட அவர்கள் செய்கை என்னக்கெட்டுப்போயிருக்கின்றது. உங்களைப் படிப்புக் கற்பிக்கும்படி அழைத்தார்களா, இவன் சின்னசாதி அவன் பெரியசாதி என்று சொல்லுவதற்கு அழைத்தார்களா, இது விவேகிகளுக்கழகல்ல மேன்மக்கள் செயலல்லவென்றுத் தடுத்துப் பேசியப் பின்னர் இனியவ்வகைப் பேசமாட்டோமென்று சொல்லிப் போய்விட்டாராம். பூர்வ சாதிபேதமற்ற திராவிட பௌத்தர்களே, சற்று கவனியுங்கள். சத்துருக்களுடைய செயல்களுங் குணங்களும் தேளுக்கு விஷம் நீங்காதென்னும் விதிபோல் அவர்களை விட்டு நீங்காமலிருக்கின்றது. நீங்களோ ஆடு கசாயிக்காரனைப் பின்தொடருவது போல் அவர்கள் செயல்களையும் அவர்கள் மதங்களையும் பின்பற்றி நாளுக்குநாள் சீரழியும் ஏதுக்களிலிருக்கின்றீர்கள். ஏழைக்குடிகள் மீது அவர்கள் வைத்திருக்கும் பொறாமெய் குணத்தைக் கண்டறிந்தேனும் அவர்கள் சார்பினை விட்டகன்று சீர்பெறும்படி வேண்டுகிறோம்.

- 4:24; நவம்பர் 23, 1910 -
 

66. ஆதாம் ஏவாள் காலவரை

வினா : ஆதாம் ஏவாள் காலவரைகளையும், ஆதாம் ஏவாள் ஆதி மனுஷரென்பதி னுண்மையையும் விளக்கியருளவோணுமாய் எமது குல ஜகத்குருவென்று இருகரங்கூப்பிப் பணிகின்றனன்.

வி. டாம். பட்லர், கே.ஜி.எஃப். ஆஸ்பிட்டல்

விடை : அன்பரே, தாம் வினாவியுள்ள சங்கை மிக்க விசேஷித்ததேயாம். இத்தகைய விசாரிணையில் நுழைந்து உசாவித் தெளிந்துக்கொள்ளுவதே விவேக விருத்திக்கழகாம். அங்ஙனமின்றி சொன்னதைச் சொல்லுங் கிளிபோல் ஒருவரெழுதி வைத்திருப்பதையும் மற்றொருவர் அதனந்தரார்த்தம் அறியாது உரைப்பதையும் மெய்யென்று நம்பி நடப்பது விவேக விருத்தியற்ற வீணர்களின் செயலாகும் தாங்கள் அன்பு கூர்ந்து வினாவுவதுபோல் ஒவ்வொருவரும் விசாரிணையினுழைந்து தெளிவடைவரேல் சகலரும் சுகமுற்று வாழ்வார்கள். உலக தோற்றக் காலவரைகளை வான சாஸ்திரிகளும், பூமி சாஸ்திரிகளும், சோதியின் இடங்களைக்கண்டும் காலத்திற்குக்காலம் அவைகள் மாறுபடும் குறிகளைக் கண்டும், அவைகளின் கணித மேறையாலும், ரசாயன சாஸ்திரிகள் பொருட்களின் குண மாறுதலாலும் உலக தோற்றமுண்டாகி இருபது வருடத்திற்கு மேற்பட்டிருக்குமென்றும், முப்பது வருடங்களுக்கு மேற்பட்டிருக்கின்றதென்றும் அனுபவக் காட்சிகளைக் கொண்டு ரூபித்து வருகின்றார்கள். பௌத்த சாஸ்திரிகளோ பூமியானது தோற்றியக்காலவரையுமில்லை அவை முற்றிலுங் கெடும் இடமுமில்லை. எக்காலமுள்ளது பூமியென்று வகுத்திருக்கின்றார்கள். இவற்றுள் அப்பூமியினின்று மட்டும் தோற்றும் பொருட்கள் யாவுங் கெடுமென்பது பௌத்தர்களின் அனுப வசம்மதமாதலின் திரிகால மறிந்தோதும் வல்லப மிருந்தும் நரர்களின் தோற்றமானது வானரரினின்று காலத்திற்குக் காலந் தேசத்திற்கு தேசப்பலபகுதிகளிலும் வாலற்றுத்தோன்றி மானமுண்டாகி மானிடரெனத் தோன்றியுள்ள தோற்றங்களுள் இன்னான் ஆதி மனிதன், இன்னான் ஆதி