பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 / அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு

மறைந்துவிட்ட காரணமே இந்திரர் தேசம் இழிந்த தேசமென்னும் பெயருக்கு வருகின்றது.
அத்தகைய வசத்தியர்கள் முன் நமது சத்திய தன்மமாம் மெய்யறத்தைப் போதிப்பது நீதி போதர் வாக்கியப்படி, பன்றிகளின் முன் முத்துகளைப் போடுவது போலும், குரங்குகளுக்குப் பூமாலையைச் சூடுவது போலு மிருக்கின்றபடியால் சத்தியதன்மத்தை தங்களது அசத்திய தன்மத்தால் வைதும் புறங்கூறியுந் தூஷித்துந் திரிகின்றார்கள். அந்நோர் சாதிக்கட்டுக்குள் அடங்காதவர்களைத் தங்களுக்குப் பராயர்களென்று கூறி தங்கள் வீதிவழியில் யேகவிடாமலும், குளத்தருகில் வரவிடாமலும், கோவில் வாயற்படி அருகே நெருங்கவிடாமலும் இழிவு படக்கூறி விலகத் துரத்துவோர் கோவிலண்டை தூரனின்று சாமி, சாமி, யாங்கள் சுரணைக் கெட்டாலுங் கெட்டுப் போகிறோம். அடித்து உதைத்தாலும் பட்டுக்கொள்ளுகிறோம் தூரனின் றேனும் தங்கள் தேவதைகளைக் கும்பிட்டுக்கொள்ளுகிறோமென்னும் சுற்றத்தோர்களில் சிலரும் அசத்தியர்களுடன் சேர்ந்துகொண்டு அந்நோர் செய்துவரும் இழிவுகளை உணராது, அசத்தியமே அசத்தியம், அசப்பியமே அசப்பியம், துன்மார்க்கமே துன்மார்க்கமெனத் துடைதட்டித் துள்ளித் துடிக்கின்றார்கள்.
இத்துடிப்பு யெம்மட்டு மிருக்குமென்னில் நந்தனை நெருப்பிலிட்டுச் சுட்டதுபோல் இவர்களையுஞ் சுட்டுத்தள்ளுமளவும் அவர்கள் பாற் சேர்ந்து கொண்டு தங்கள் பூர்வ தன்மத்தை மறந்தே நிற்பார்கள். எங்கள் தெய்வம் உங்களை பாலிக்காது, எங்கள் கோவில் வாயற்படியில் நீங்கள் மறந்துங் காலை வைக்கப்படாதெனக் கூறியிருந்தும் மலைமீது சென்று சுப்பிரமணியச் சாமியைத் தொழுத நாடார்களிற் சிலரை ஆறுமாதம் ஒரு வருடம் தெண்டித்துவிட்டதுபோலிவர்களையுந் தெண்டிக்குங்காலம் வருமாயின் அப்போதுதான் இவர்களுக்குச் சுரணை பிறந்து அப்பப்பா அது எங்கள் சாமியல்லவென்று ஒதுங்கி தங்கள் சாமி ததாகதரைநோக்கி என்றென்றும் சிறப்புக்குன்றா சத்திய தன்மத்தில் நிலைப்பார்கள்.
இதன் மத்தியில் அவர்களுக்குக் கூறும் சத்தியதன்மங்கள் யாவும், "காமாலைக்கண்ணனுக்கு சூரியன் மஞ்சள் நிறமாகக்காட்டுவதுபோல்" அசத்தியத்தைக் கைப்பற்றியுள்ளோர்களுக்கு சாத்திய தன்மம் அசாத்தியமாகவே விளங்கும். ஆதலால் சுயநலங்கருதாது பொதுநலங்கருதும் பௌத்த சிகாமணிகள் ஒவ்வொருவரும் அன்பினிலையிலும் ஆனந்த சாந்தத்திலும் லயித்து அசத்தியர்கள் தூஷிப்பை பூஷிப்பாகவும், துன்மார்க்கர்கள் வைதலை ஆசீராகவுமேற்று மேலும் மேலும் சாத்திய தன்மத்தை விளக்கிக்கொண்டே வருவீர்களாயின், முன்னெடுத்தக் குடி மதிப்புத் தொகையில் சென்னையில் மட்டிலும் எழுபதுஞ் சில்லரை பெளத்தர்களிருந்து இவ்வருஷ குடிமதிப்புத் தொகையில் ஐன்னூற்றி முப்பதுஞ் சில்லரை பௌத்தர்கள் பெருகி விட்டார்கள். மற்றுங் கோலார், திருப்பத்தூர், பெங்களூர், ஐதிராபாத், இரங்கோன் முதலியக் கணக்குகளும் வருமாயின் ஆயிரத்திற்கு மேற்பட்ட பெளத்த சிகாமணிகள் தேறுவார்கள்.
இத்தகைய சத்தியதன்ம போதத்தால் பொய் வேதங்களும், பொய் வேதாந்தங்களும், பொய்ப் புராணங்களும், பொய் தேவதைகளும் ஒழிந்து மதக்கடைகளும் அழிந்து வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நான்கும் பெருகுமாயின் பூர்வ இந்திரர் தேசம் இந்திர தேசமாகவே விளங்குவதுமன்றி, சகல குடிகளும் பிரிட்டிஷ் இராஜ விசுவாசத்தில் நிலைத்து சுகச்சீர் பெறுவார்கள்.

- 5:17; அக்டோபர் 4, 1911 -
 

89. பௌத்த குருக்களின் வாசா பௌர்ணமி

பெளத்த சோதிரர்களே நமது ஆதியங்கடவுளாம் புத்த பிரான் இருந்த காலத்தில் ஒவ்வோர் சங்கத்திலுமுள்ள சமணமுனிவர்களை ஆனி மாதம் பெளர்ணமி முதல் புரட்டாசி மாதம் பெளர்ணமி வரையில் ஒரு மடங்களைவிட்டு மற்றொரு மடங்களுக்கு போகவிடாமல் தங்கடங்கள்