பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 3, ஞான அலாய்சியஸ்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்திதாசர் சிந்தனைகள் மூன்றாம் தொகுப்பு /75

தேசவழக்கமாயின் அதன் காரணமென்ன, பெட்டியில் வைத்து வண்டியில் கொண்டுபோவது அவர்கள் தேசவழக்கமா, நமது தேசவழக்கமா. சுடலைக்குக் கொண்டுபோய் குருக்களும் பௌத்தர்களுந் தியானித்த மந்திரமென்ன. பிரேதத்தை தகனஞ்செய்யும் போது நெய்யுங் கற்பூரமுஞ் சேர்த்து தகனிப்பது யெற்றிற்கு. அன்று அதிகக்கானலில்லமற் குளிர்ந்திருந்தது குருவின் நற்செயலா, சூழ்ந்துவந்த மக்களின் நற்காலமா. இவற்றை விளக்கி அடியேனை ஆதரிக்கும்படி வேண்டும்

வீ. கோபாலன், தின்னனூர்.

விடை : பெளத்தகுருக்களில், சமணநிலையுள்ளவர்கள் பிணி மூப்பை ஜெயிக்காதவர்கள், அறஹத்து நிலையடைந்தவர்கள் பிணி, மூப்பை ஜெயித்தவர்களாவர். பெருவிரலைக்கட்டுவது நமது தேசத்தோர் வழக்கம் போல் அவர்களுங் கட்டுகின்றார்கள். அவ்வகைக் கட்டுங் காரணமியாதெனில், உலகபாசபந்தக்கட்டு விடவில்லையென்பது குறிப்பு. இதை அநுசரித்தே தாயுமானவரும் "நிகளபந்தக்கட்டவிழ்ப்பாரே" என்றுங் கூறியுள்ளார். அவர்கள் தேசத்தில் ஓர் வகைத்தேர்கட்டி பெட்டியிலடக்கி வைத்து சுடலைக்குக் கொண்டுபோய் தகனஞ் செய்வது வழக்கம். இத்தேசத்துள் அவ்வகைத்தேர் கட்டுவோரில்லாதபடியால் பெட்டியிலடக்கி வண்டியில் வைத்துக் கொண்டுபோகப் பட்டது. சுடலையிற் சென்று அங்குசொல்லும் மந்திரம் யாதெனில், கொலை செய்யோம், பொய் சொல்லோம், களவு செய்யோம், விபச்சாரஞ் செய்யோம், லகிரியருந்தோ மென்று சீலத்தை சிந்திப்பதன்றி, குருநரகம் ஏகப்படாது மோட்சம் போகவேண்டுமென்னும் மந்திரங் கிடையாது. அன்றய தினம் தகனிக்குங்கால் பெருங்கட்டைகளாதலால் சீக்கிறமெரிதற்கு நெய்விட்டும் கெட்டவாயுக்கள் நீங்குதற்குக் கற்பூரஞ்சேர்த்துந் தகனஞ்செய்யப்பட்டது. இறந்த குருவினது நன்மெய் பயனும் பிரேதத்தைச் சூழ்ந்துவந்த மக்களின் நன்னேரமுமே அக்காலெழுஞ் சூரிய வெப்பந் தணிந்து சுகக்காட்சி தந்தது. அவற்றைக் காலத்தின் செயலென்னினும் அக்கால் சூழ்ந்துவந்த மக்களின் நன்னேரமே யாதலின் காலத்தையும் பயனையுங்கொண்டு அவற்றை நற்காட்சி என்றே கூறியுள்ளாம். பெளத்தமென்பது தன்மசம்மந்தமின்றி மதசம்மந்த மாகா. ஆதலின் காலம் நேர்ந்த வழியில் கிரியைகள் நிறைவேறும். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல காலவகையினே"

- 6:2; சூன் 19,1912 -

99. கிறிஸ்துமத கடவுளுக்கும் வேதத்திற்கும் மதுபானம் உடன்பாடல்லவேயல்ல

பூர்வ மக்கள் யாவரும் மதுவென்னுந் தேனுக்கொப்பாய வினிய ரசத்தை அருந்தி வந்தார்களன்றி மயக்கத்தை உண்டுசெய்யும் ரசத்தை அருந்தினவர்களில்லை. நாளுக்குநாள் திராட்சரசத்தையும், பனை ரசத்தையும், தென்னை ரசத்தையும், ஈச்சரசத்தையும் மதுவென்னுந் தேனுக்கொப்ப அருந்துவதை நீக்கியும் வெல்லங்கற்கண்டு இவைகள் செய்யும் வகைகளை அகற்றியும் இரசங்களுக்கு லாகிரியேற்றி குடிக்க ஆரம்பித்தும் சுராபானமென்னும் கஞ்ஜாநீரில் சருக்கரை முதலியவற்றைக் கலந்துங் குடிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.
இத்தகைய சுராபானலாகிரி இந்துவேதத்திற்குடன்பாடாயதை அவர்கள் வேதத்திலேயே காணலாம். கிறிஸ்து வேதத்தில் கிறிஸ்துவானவர் ஓர் கலியாண காலத்தில் அன்னம் புசித்த பின்னர் அனைவருக்கும் திராட்ச ரசத்தை அளித்தாரன்றி மயக்கத்தைக் கொடுக்கும் மதுபானத்தைக் கொடுத் தாரில்லை. தேனென்னும் இனிய பொருளுக்கு மதுவென்னும் பெயரற்று புத்தி மயக்கத்தையுங் கேட்டையும் உண்டு செய்யும் வஸ்துவிற்கே மதுவென்னும் பெயரையளித்துள்ளார்கள். ஆயினும் கிறிஸ்துவானவர் கலியாணத்திலளித்த மதுவானது மயக்கத்தைக்கொடுக்கக்கூடிய வஸ்துவாயிருப்பின் அவரது சிஷியவர்க்கத்தோர் மதுவை அருந்தலாகாதென்று கண்டித்திருக்க மாட்டார்கள்.