பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 211


கதிரவனையும் தேவர்களும் மண்ணுலகத்தவரும் தொழுவர். காலையில் ஞாயிறு வணக்கம் செய்வது பலருக்கு நடைமுறை வழக்கமாகும். பெரும் பொங்கல் நாளை ஞாயிறு வணக்க நாளாகக் கொண்டாடுதல் மரபு. இளங்கோவடிகள் 'ஞாயிறு போற்றுதும்- ஞாயிறு போற்றுதும்’ எனச் சிலப்பதிகாரத்தைத் தொடங்கி யுள்ளார். அடுத்து, மன்னரும் இடையில் உடைவாள் செருகியிருப்பர்- கதிரவனுக்கும் ஒளியாகிய வாள் உள்ளது. அரசரும் தேரேறி வருவர்- கதிரவனும் ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றை ஆழித்தேரில் வருவதாகக் கூறப்படுகிறான். இப்பாடலில், கதிரவனின் இயற்கையான தோற்றத்திற்குத் தான் ஒரு காரணம் கூறியுள்ளார் கம்பர். இது தற்குறிப்பேற்றம். இதில் இரு பொருள் அணியும் (சிலேடையும்) ஒரளவு உள்ளது.

வனம் புகு படலம்

காணாய்

இராமன் காட்டில் பல காட்சிகளைச் சீதைக்குக் காட்டிக் கொண்டே செல்கிறான். கல் முள் நிறைந்த தரையில் நடக்க உன் அடிகள் பொறுக்கமாட்டா என மரங்கள் வழி நெடுக மலர்களை உதிர்த்திருப்பதைக் காணாய். மரம்- செடிகளில் உள்ள கொம்புகள் உன் துடிபோன்ற இடையைக் கண்டு நாணித் துவள்வதைக் காண்பாய்:

அடிஇணை பொறைகல்லா என்றுகொல் அதர் எங்கும்
இடையிடை மலர் சிந்தும் இனமரம் இவை காணாய் கொடியினொடு இள வாசக் கொம்பர்கள் குயிலே உன்
துடிபுரை இடைநாணித் துவள்வன. அவை காணாய்

(16)

இயற்கையாய் நிகழ்வதற்குக் கம்பர் செயற்கையாகக் காரணம் கற்பித்துத் தற்குறிப்பேற்றம் செய்துள்ளார்.