பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

9

அருள்நெறி முழக்கம்


என்றும் பக்தியிலும்- அன்பிலும் அறத்திலும் பற்றுடையவர்களாகச் செய்வதுதான் திருமடங்களின் கடமையாகும். அவை கடமை தவறினால் மக்கட்சமுதாயமும் கடமை தவறித் தவறான பாதையில் சென்று விடும் என்பதை நாம் இன்று உலகியல் வாழ்வில் கண்கூடாகக் காண்கின்றோம்.

மக்களின் அன்றாட வாழ்வைக் கவனித்து வரவேண்டி பொறுப்பு சமயத் தொண்டர்களுக்கு உண்டு. மக்களோடு மக்களாகப் பழகி அருள்நெறியைப் புகுத்தவேண்டிய சமய நிலையங்கள் தங்கள் கடமையை உணர்ந்து சரிவரத் தொண்டாற்ற வேண்டும். ஆண்டவனின் திருநாமங்களைப் பாடி மகிழ்வதற்காகவும் பேசி மகிழ்வதற்காகவும்தான் பஜனை மடங்கள் நாட்டில் எழுந்தன. அந்த உயரிய கருத்துக்களுக்கு இன்று நாட்டில் எதிர்ப்புக்கள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. அதனை இங்குக் குழுமியிருக்கின்ற அத்தனை மக்களும் நன்கு தெரிந்து கொண்டிருக்கலாம். அவர்களின் எதிர்ப்பு நம்மையும் நமது கடவுட்கொள்கையையும் எதுவும் செய்துவிட முடியாது. நாம் நமது காரியத்திலேயே கண்ணோட்டம் செலுத்தினால், தானாக விரைவில் நம்முடைய லட்சியங்கள் வெற்றிபெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. நமக்குப் புறம்பான காரியத்தின் நலத்திலோ தீதிலோ நமது கருத்தினைச் செலவிடாது இருத்தல் வேண்டும்.

தமிழ்நாட்டு ஆத்திகத்தை எத்தனை எதிர்ப்புகளும் - எரித்தல்களும் உடைத்தல்களும் மாற்றிவிட முடியாது. மாற்றி விடலாம் என்று கருதிச் செயலாற்ற முனைதல் பயன்தராது என்பதைத் துணிவுடன் - அதே நேரத்தில் அன்புடைத் தோழர்களுக்கு மனம்கனிந்த நன்றியுடன் எடுத்துக் கூறுகின்றோம்.

அறிவுடைய ஒருவன் எக்காலத்தும் பயன்தரக்கூடிய காரியத்தில்தான் முனைவான். சில தோழர்களின் அறிவின் போக்கு விசித்திரமாகவும் வினோதமாகவும் இருக்கின்றது. எவ்வளவுதான் நாத்திகனாக இருந்தபோதிலும் அவனுடைய முதுமைக் காலத்தில் அல்லது அவனைத் துன்பம் சூழ்ந்த காலத்தில் அவன்