பக்கம்:அறவோர் மு. வ.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

133

முடியுமா என்பது ஐயப்பாடே. என் ஆராய்ச்சி அமைதியாக நடைபெறுவதற்குப் பெங்களுரில் இருந்த அவர் வீட்டைச் சில கோடை விடுமுறைகளில் எனக்கு ஒதுக்கிய அப்பேருள்ளத்தினை இன்றும் நான் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

அரசினரின் உதவித்தொகைக்கெனக் கல்லூரி மாணவர் எவரேனும் விண்ணப்பஞ் செய்வாரேயானால், தொடர்புடைய அதிகாரியைக் கண்டுபேசி அவ் ஏழை மாணவர் அரசின் நிதியுதவி பெற்று வாழ்வில் ஏற்றம் பெற எல்லா வகைகளிலும் உதவுவார்.

சிலர் இவரைச்சட்ட மேலவைத் தேர்தலுக்கு நிற்க வேண்டும் என்று வற்புறுத்திய காலையிலும், தாம். உறுதியாக என்றும் எப்போதும் தேர்தலுக்கு நிற்கப் போவதில்லை என்று ஒரேயடியாக மறுத்துவிட்டார்.

இயற்கைக் காட்சிகளில் இவருக்கு ஈடுபாடு மிகுதி. காவிரியாறு கண்டால் அதில் குளித்து விட்டுத்தான் மேற்கொண்டு பயணத்தைத் தொடருவார், இயற்கை மருத்துவமே இவருக்கு உடன்பாடு. சளித்தொல்லையி லிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தாம் அலுவலக அறையில் 'Sea Pills' என்னும் இயற்கை மருத்துவ மாத்திரைகளை வைத்திருந்தார்.

திருமணம் இரு தரப்புப் பெற்றோர்களும் விரும்பும் வகையில் அமைய வேண்டும் என்பார். பிறர் கண்படாதவாறு வாழ்வு எளிமையாக அமைய வேண்டும் என்பார். திருநாவுக்கரசர் திருத்தாண்டகம், தாயுமானவர் பராபரக் கண்ணி, இராமதீர்த்தரின் கட்டுரைகள், இராமகிருஷ்ணரின் உபதேசங்கள், விவேகானந்தரின் வாழ்வு, காந்தியடிகளின் தொண்டு, இவருக்கு மிகவும் பிடிக்கும். இவற்றையெல்லாம் நினைவுகூரும்பொழுது, பெருவாழ்வு வாழ்ந்த அப்பெருமகனாரின் நினைவு வருகின்றது.




9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/136&oldid=1239000" இலிருந்து மீள்விக்கப்பட்டது