பக்கம்:அறிவியல் அகராதி.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிவியல் கொடை

தமிழவேள்: ச. மெய்யப்பன்
நிறுவனர்: மெய்யப்பன் தமிழாய்வகம்

தமிழ்மொழி இலக்கிய வளம் செறிந்த மொழி. சொல்வளம் மிகுந்த மொழி காலந்தோறும் சொற்கள் பெருகித் தமிழ்ச் சொற் களஞ்சியம் மிக விரிந்துவிட்டது. மானுடவியல் சார்ந்த எந்தக் கருத்தையும் உரைப்பதற்கேற்ற சொற்கள் தமிழ்மொழி போல் வேறு எந்த மொழியிலும் இல்லை என உறுதி கூறலாம். வாழ்வியல் கருத்துக்களைத் திட்ட நுட்பத்துடன் எடுத்துச்சொல்ல எத்தனையோ சொற்கள் தமிழ்ச் சொற் களஞ்சியத்தில் பல்கிக் கிடக்கின்றன. அறிவியல் கருத்துக்களைக் கூறப் போதுமான சொற்கள் மெல்ல மெல்ல உருவாகி வருகின்றன.

உலக மொழியாகிய ஆங்கிலத்தில் பல்வேறு துறைகளுக்குப் பல்வகை அகராதிகள் பல்கியுள்ளன. காலந்தோறும் உருவாக்கப் பெறும் சொற்கள் சொற் களஞ்சியத்தில் சேர்ந்து அதன் சொற்களஞ்சியத்தை வளப்படுத்தியுள்ளன. ஆங்கிலத்தில் அறிவியல் துறைகளான இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் முதலிய துறைகளுக்குத் தனித்தனியே அகராதிகள் தோன்றிவிட்டன.

தமிழில் அறிவியல் என்னும் சொல்லே புது வழக்கு பல்லாண்டுகளாகப் பொது விஞ்ஞானம் என்றே சொல்லி வந்தோம்.