பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34



தூக்கிவிடுகிறார்! மெஜாரட்டி வகுப்பை!! இந்த வாதத்தை இவர் எவ்வளவு கேலி செய்தார் மெஜாரட்டியைத் தூக்கி விடுவதாக? ஏன்! விரல் விட்டு எண்ணக் கூடிய நிலையிலுள்ள பிராமணர்கள் மீது, வீணாகத்துவேஷத்தைக் கிளப்பிக்கொண்டு, பார்ப்பனரல்லாதாரின் நலனைப்பாதுகாப்பதாகப் பறைசாற்றுகிறார்கள் இந்த வகுப்புவாதிகள்—இதுவன்றோ முன்பு தினசரியார் தீட்டும் பாணி! இன்று? தூக்கிவிடுகிறார், மெஜாரட்டி வகுப்பினரை! ஆச்சரியம், இவருடைய மாறுதல் அல்ல! மாறாது இருக்கும் மெஜாரட்டியின் நிலைமைதான்! முதல் வகுப்புவாதிக்கும் முதலமைச்சராக ஒமந்தூரார் வீற்றிருப்பதற்கும் இடையே எவ்வளவோ ஆண்டுகள் எத்தனையோ முயற்சிகள் எனினும், இன்றும், மெஜாரட்டி வகுப்பினர், தூக்கிவிடப்படவேண்டிய நிலை இருக்கிறது! ஏன்? அவ்வளவு கீழே அழுத்தி வைக்கப்பட்டுள்ளனர் தினசரியார் நாட்களிலே, இந்தத் தூக்கிவிடும் பணி தேவை என்றால், தியாகர்நாட்களிலே, இது எவ்வளவு அதிகமாகத்தேவைப்பட்டிருக்கவேண்டும்? எண்ணிப்பார்க்கவேண்டுகிறோம். இன்னமும்எண்ணத்தில் தெளிவுபெறாதிருப்பவர்களை, சிறு பான்மையோருக்குத்தான் பாதுகாப்புத் தேவை. பெரும்பான்மையினருக்கு ஏன்? என்று பேசினவர்கள் தினசரியாரின் கருத்தைக் கவனித்துத் தெளிவுபெற வேண்டுகிறோம்.

தூங்கிக்கிடந்தவர்களைத் தட்டி எழுப்பிய தியாகர், விழித்தவர்களைப் பார்த்து, உங்கள் நிலை மிகமிகப் பிற்போக்காக இருக்ககிறது, முன்னேறுங்கள் துரிதமாக, சகல துறைகளிலும், என்று கூறினார், தூக்கிவிடத் தொடங்கினார். இதுதான் அவர் செய்த வகுப்புவாதம்! ஆனால், அவருடைய பேரன்மார் காலத்துச் சொக்கலிங்கனார், தாத்தா கண்டறிந்த திட்டத்தை தத்துவார்த்த விளக்கத்தோடு செய்துகாட்டுகிறார். ஜனநாயகம் என்றால் எல்லோருக்கும் சம சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட காரியங்களை குறிப்பிட்ட வகுப்பார்தான் செய்ய வேண்டுமென்ற கட்டாயமோ, ஏகபோக உரிமையோகிடையாது என்று தினசரி தீட்டுகிறது. இதே இலட்சியத்துக்காகத்தான். நமது இயக்கம் இடையுறாது பாடுபடுகிறது. இந்தக் கருத்துடன் பணிபுரியத் தொடங்கியபோது, வகுப்புவாதி, பார்ப்——