பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

107



“நம் தேசக் கடைகளில் அரிசி, பருப்பு, காய்கறி தவிர மற்றவை எல்லாம் ஆங்கிலேயர் சாமான்களேயன்றி நமது சாமான்கள் அல்லவே! அப்படிப்பட்ட சாமான்களை சிருஷ்டிக்க நமது தேச மக்களுக்கு திறமை இல்லையே! ஐக்கியம் இல்லையே! தைரியம் இல்லையே! ரோஷம் இல்லையே!” என்று ஐயர் எழுதியதாக, அ.மா. சாமி தனது ‘தமிழ் இதழ்கள் - தோற்றம் - வளர்ச்சி’ என்ற புத்தகத்தின் குறிப்பிடுகிறார்.

இதே ஜி. சுப்பிரமணிய ஐயர்தான், ‘தி இந்து’ (The Hindu; என்ற இங்லீஷ் நாளேடு பத்திரிகைக்கும் உரிமையாளராக இருந்தார். எனவே, இந்த வீர தீரமான பத்திரிகையாளரே விடுதலைப் போரில் ஈடுபாடு கொண்ட முதல் பத்திரிகையாளர் என்று உறுதியிட்டு அறுதியை இறுதியாகவே கூறலாம் இல்லையா?

இந்த ஜி. சுப்பிரமணிய ஐயருக்கு Hindu நாளேட்டை - நடத்திட சேலம் வழக்கறிஞர் விசயராகவாசாரியர் பெரும் உதவியாக உழைத்தார். ‘இந்து’ பத்திரிகை முதன் முதலாக வார ஏடாக 20.9.1878-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளி வந்தது. அதன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயருடன் அவருக்குப் பின்பலமாக சி. கருணாகரமேனன், கே. சுப்பாராவ், கே. நடராஜ ஐயர் ஆகியோர் பேருதவி புரிந்தார்கள்.

அதே ‘இந்து’ வார இதழ், 1883-ஆம் ஆண்டில் வாரம் மும்முறை பத்திரிகையாக வெளிவந்தது. பத்திரிகை வரலாற்றில் வார ஏடாகவும், வாரம் மும்முறை இதழாகவும் வெளிவந்த ஒரே பத்திரிகை ‘தி ஹிந்து’தான். அதற்குப் பிறகே ‘இந்து’ நாளேடாக வெளிவந்து தேசப் பணி புரிந்தது.

‘இந்து’ பத்திரிகையின் சட்ட ஆலோசகராக இருந்த எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்கார், ‘இந்து’ இதழை 1905-ஆம் ஆண்டில் வாங்கி நடத்தினார். அன்று முதல் இன்று வரை இந்து நாளேடு, உலக நாளேடுகளில் ஒன்றாக, உலக நாடுகளால் கருதப்பட்டு விற்பனையாகி, பெயரும் புகழும் பெற்று நிலைத்து நின்று மக்கட் தொண்டாற்றி வருகின்றது.