பக்கம்:இன்னொரு உரிமை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82  சு. சமுத்திரம்

 வைரமணியின் குடும்பம், அந்தக் கிராமத்தில் வசதியுள்ள பிறருக்குக் கடன் கொடுக்கக் கூடிய நிலையில் உள்ள குடும்பம். அவன் தந்தை 'வழக்காளி.' வெளியூர்களில் இருந்து கூட 'விவகாரம்' பேசுவதற்காக அவரை 'வில் வண்டி'யில் வைத்து அழைத்துப் போவார்கள். பிறர் மனதில் இருப்பதைப் பக்குவமாக வரவழைத்துத் தெளிவாக 'பைசல்' செய்வார். அப்படிப்பட்டவர் மகனுக்குப் பெண் பார்த்தபோது, 'அய்யா' சொல்லுக்கு அடுத்த சொல் சொல்லாத வைரமணியும், பெண்ணைப் பார்க்க வேண்டு மென்று ஜாடை மாடையாகக் கூடச் சொல்லவில்லை.

ஆனால்-

மணமேடையில் அவன் பெண்ணைப் பார்ப்பதற்கு முன்னதாகவே "போயும்... போயும் இவள் தானா கிடைச்சாள்" என்று சொந்தக்காரர்கள் அவனிடம் பேசத் துவங்கினார்கள். இதனால் பாதி உயிர் போனவன் போல் துடித்த வைரமணி, பெண்ணைப் பார்த்ததும் முழு உயிரும் போனவன்போல், தலைக்குமேல் வெள்ளம் போன இயலாமையில் ஒரு ஜடமாகவே உட்கார்ந்திருத்தான், அவனைச் சுற்றி ஏதோ ஒரு வேடிக்கை நடப்பதுபோலவும், அவனுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாதது போலவும் அவனை அறி யாமலே அவன் மனம் பாவித்துக் கொண்டது.

அவனவள்-அது தான் லிங்கம்மாவும் அசைவற்று உட் கார்ந்திருந்தாள். குச்சிக் கால்கள்; குச்சிக் கைகள் ; முற்றிப் போன டி. பி. நோயில் விழுந்தவள் போன்ற உடல்; குறுகிப் போன கழுத்து, லேசாகக் கூன் விழுந்த முதுகு; உள் நோக்கிப் பாய்ந்த கண்கள், நெற்றி எது. தலை எது என்று அடையாளம் காண முடியாத தலை.

திருமணம் முடிந்த மூன்று மணி நேரத்தில் அவள் தோற்றத்தில் மட்டுமல்ல, குணபாகத்திலும் குறைவான வள் என்பது பிள்ளை வீட்டாருக்கு நிரூபணமாகியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/91&oldid=1369387" இலிருந்து மீள்விக்கப்பட்டது