பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் தானே? இதிலிருந்து ஓர் உண்மை புலப்படுகிறது. நடைபெற்ற ஒரே செயலைக் காணும் இருவர் தத்தம் மனோ நிலைக்கு ஏற்ப அதன் பொருளை விரிப்பர். ஒருவாறு இருவர் கூற்றிலும் உண்மை இருத்தல் கூடும் எனினும், நடுவுநிலை காண்போர் உண்மையை ஆராய்ந்து முடிவுகட்ட வேண்டும். இராவணன், இராகவனைப்பற்றி இவ்வளவு அறிந்திருந்தும், அவனை மதியாமற்போனதற்குக் காரணம் அவன் கொண்டிருந்த தன்னம்பிக்கையே ஆகும். இப்பண்பு உயர்வுடையதாயினும். எல்லை கடந்து போகுந் தறுவாயில் தன்னை மேற் கொண்டானுக்குத் தீங்கையே இழைக்கிறது. வீரச் செயல் என்பது என்ன என்பதை நன்கறிந்த இராவணன் அறிவையும் அது மயக்கிவிட்டது; கண்டதும் கேட்டதுமான உண்மைகளைத் திரித்து உணருமாறு செய்துவிட்டது. ஏனையோர்பால் நன்மையே விளைக்கும் 'தன்னம்பிக்கை' என்ற இந்நற்பண்பு, இராவணன் தீமைக்குத் துணை செய்கிறது. ஒரு வேளை சீதைபால் இராவணன் காமங் கொள்ளாது இருந்திருப்பின், இராமன்பாற் கண்ட இச்செயல்களைப் பாராட்டியிருப்பான். இப்பொழுது அவன் மனம் கெட்டுவிட்டதாகலின், இப்பண்பே தீமைக்கு மேலும் மேலும் தூபம் போடுகிறது. இனி இறுதியாக வீடணன் கண்ட இலங்கை வேந்தனை, இராவணன் இறந்த பின்னர்க் காண் கிறோம். இராவணன் இறந்து மண்மேல் கிடக்கையில் இராமன் அவனை நெருங்கிக் காண்கிறான்; இராவணன் முதுகிற் புண்பட்டுக் கிடப்பதைக் காண் கிறான்; உடனே தனது வீரத்தைத் தானே பழித்துக்