பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 | இறையனார் அகப்பொருள் (களவு

என்னை, புணராதமுன் சொல் இன்மையின், கற்பென்று சிறப்பிக்கப்பட்ட ஒழுக்கம் களவென்னும் ஒழுக்கத்தின் வழித்து என்றவாறு.

களவின்கட் புணராதமுன் சொல் இல்லை
எனவே,
புணராத முன் சொல் நிகழும் என்பாரை மறுத்தாராம்.
இனிப் புணராதமுன் சொல் இல்லை எனவே,
புணர்ச்சியுள்ளும் புணர்ச்சிப் பின்னும் சொல் உள எனப்பட்டதாம்.
ஆயினும், புணர்ச்சியுட் புலனல்ல அவர்க்குத் துப்பாயினல்லது என்பது.

இனிப், புணர்ச்சியின் பின் சொற்கள் புலனாம்;
அவை யாவையோ எனின்,
நயப்புணர்த்தினவும் பிரிவச்சமும் வன்புறையும் எனக் கொள்க.
அப் பெற்றிப்பட்ட களவொழுக்கின் வழி நிகழ்ந்து, பின்னைத் தமராற் பெற்று எய்துதல் கற்பு எனக் கொள்க.
எனவே, இவ்வாற்றானும் உலகக் களவன்று என்பது பெற்றாம்.
என்னை?
உலகக்களவு புணராத முன்னுஞ் சொன்னிகழ்ச்சி யுடைமையின்.
கற்புக் களவின்வழித்து என்னாது,
எனப்படுவது' என்றது எற்றிற்கோ எனின்,
களவின் வழி நிகழாதேயும் உண்டு உலகக்கற்பு.
அஃது அத்துணைச் சிறப்பிற் றன்று என்றற்குச் சொல்லப்பட்டது.
எனவே, இச்சூத்திரம் பெரும்பொருட்டுக் களவினையும் கற்பினையும் தழீஇயிற்று என்பது.
(15)

சூத்திரம் - 16

களவினுள் தவிர்ச்சி காப்புமிகின் உரித்தே
வரைவிடை வைத்த காலை ஆன.

என்பது என்னுதலிற்றோ எனின்,
களவு காலத்துச் சென்று ஒழுகாநின்ற தலைமகற்கு இடையிடும் இடையீடு இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள் :
களவினுள் தவிர்ச்சி என்பது - களவு காலத்துத் தலைமகள் புணராது இடையிடும் இடையீடு என்றவாறு;
தலைமகளை எய்தாத நாள் எனினும் ஒக்கும்;
காப்புமிகின் உரித்தே என்பது- காப்புக் கைமிக்கவழியும் உரித்து என்ற வாறு ;
வரைவிடை வைத்த காலை ஆன என்பது - வரைவிடை வைத்த காலத்தானும் உரித்து என்றவாறு.

களவினுள் தவிர்ச்சி காப்புமிக்க வழியும் உரித்து, வரை விடைவைத்த காலத்துக்கண்ணும் உரித்து என்றவாறு.