பக்கம்:இலக்கண வரலாறு.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

3. உரையாசிரியர்கள் கால வயப்பட்டுப் புதிய கொள்கைகளை ஏற்றிக் கூறும் காலவுரை" என்பன.

தொல்காப்பிய உரைகள் :

தொல்காப்பிய உரையாசிரியர்களுள் முன்னவரும், முழு நூலுக்கும் உரைகண்டவரும் இளம்பூரணர் என்னும் உரையாசிரியரே. ஆசிரியர் நச்சினார்க்கினியருரை எழுத்து சொல் முழுமைக்கும் பொருளதிகாரத்தில் உவமையியல் மெய்ப்பாட்டியல் மரபியல் ஒழிந்த ஆறு இயல்களுக்கும் கிடைத்துள்ளது. பேராசிரியர் உரை தொல்காப்பியப் பொருளதிகாரப் பின்னான்கு இயல்களுக்கே இடைத்துள்ளது. சேனாவரையர், தெய்வச் சிலையார் என்பார் உரை சொல்லதிகாரம் ஒன்றற்கே கிடைத்துள்ளது. கல்லாடர் உரையும் பழையவுரை என்னும் மற்றோர் உரையும் சொல்லதிகாரம் முழுமைக்கும் தாமும் வாய்க்காதவை. அவற்றைப் பற்றிய மற்றைச் செய்திகளை அவ்வவ்வுரைப் பகுதிகளில் காண்க.

அ. இளம்பூரணம்

உரையாசிரியர் இளம்பூரணர் :

உரையாசிரியர் என்ற அளவானே, 'இளம்பூரணர்' என அறியப்பெறும் பெருமையுடையவர் இவர். தொல்காப்பியத்திற்கு முதற்கண் உரை கண்டவராதலுடன், முதன்மையான உரை கண்டவரும் இவரே. மற்றொரு சிறப்பு இவருரையே நூன் முழுமைக்கும் கிடைத்துள்ளமை. உரையாசிரியர் புலமை நலத்தையும், பேரருள் பேருள்ளத்தையும், உரையெழுதுதற்கே தம் தவவாழ்வைச் செலவிட்ட தமிழ்ப்பற்றையும் எத்துணை விரித்துச் சொல்யினும் குறைவுடையதாகவே அமையும். அத்தகும் உயர்வற உயர்த்த உயர்வர் இவர்.

இ.வ—5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/110&oldid=1471426" இலிருந்து மீள்விக்கப்பட்டது