பக்கம்:இலக்கண வரலாறு.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

‘கந்தருவம்’ என்னும் சொல் வரவு அதன் பிற்பாட்டை விளக்கும். ஆயினும் கோவை நூல்கள் தோன்றுதற்கு முற்பட்ட முற்பாட்டையும் நூலமைதி விளக்கும். இவ்வகையால் இதன் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகாது எனலாம். இவர் சங்கப் புலவராம் இறையனார் எனினும், இவரல்லாப் பிறரொருவர் எனினும் இக்காலக் குறிப்பு ஏற்கத் தக்கதாகலாம். நூற்பாக்களைக் கருதிய அளவில் சமயச் சார்பு கொள்ள வாய்ப்பு எதுவும் இல்லை. உரை கண்டவர் சமயம் ‘சைவம்’ என்பது வெளிப்படையான செய்தி.

களவியலுரை

உரையால் நூலுக்குத் தனிச் சிறப்பு உண்டாதல் உண்டு என்பதற்குத் தலையாய எடுத்துக்காட்டு களவியல் உரை எனலாம். அதன் வளமும் நயமும் தெளிவும் தேர்ச்சியும் தனிப் பேராய்விற்கு உரியது.

முதல் நூற்பா

முதல் நூற்பாவைக் குறித்த அளவில் நிறுத்திவிட்டுப் பாயிரம், பாயிர வகை, அவற்றின் இன்றியமையாமை, முச்சங்க வரலாறு, களவியல் வரலாறு, களவியல் உரை கண்டமை, உரை நடந்து வந்த முறை, களவு என்றதன் காரணம், களவியல் கற்க நாற்பொருளும் பயத்தல், நூல், நூல் வகை, நூல் நுதலியது, நூற்பா நுதலியது, அன்பு இன்னது என்பது, பொருள்வகை, ஐந்திணை, ஐந்திணை முதல் உரி கருப் பொருள்கள், திணை, ஐந்திணைக் களவு, எண்வகை மணம் ஆகிய இவற்றையெல்லாம் தனி இலக்கணமென இலக்கிய அமைதியில் இருபத்தெட்டுப் பக்க அளவில் விரித்துச் செல்கின்றது உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/217&oldid=1472502" இலிருந்து மீள்விக்கப்பட்டது