பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

இலக்கியக் தூதர்கள்

ளுடைய வாழ்வில் நிகழும் பற்பல செய்திகளையும் தக்க இடங்களில் பொற்புறவும் மெய்ப்பாடு தோன்றவும் கூறும் திட்பமுடையது. வரலாற்று மாந்தர் இயல்புகளைத் தக்கவாறு அவர் தம் வாய்மொழியில் வெளிப்படுத்துந் திறன் வியத்தற்குரியது. ‘செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளிற் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர்’ என்று கம்பர் குறிப்பிடும் கவிஞர் இலக்கணத்திற்கு அவரே ஓர் அரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.

அனுமன் செய்தி அறிதல்

இத்தகைய அருஞ்சுவைமிக்க பெருங்காவியத்தில் இராமன், சீதை, அனுமன் முதலான காவிய மாந்தர்களின் இயல்புகள் நயம்பெறவும் தெளிவுறவும் கட்டுரைக்கப்படுகின்றன. வில்லின் செல்வனாகிய இராமன் சொல்லின் செல்வனாகிய அனுமனைத் தன் தேவியாகிய சீதையைக் கண்டு வரும் பொருட்டுத் தென்றிசை நோக்கித் தூது போக்கினான். அந்நாளில் அனுமனைத் தனியே யழைத்துச் சீதையை உணர்ந்துகொள்ளும் பொருட்டு, உற்ற அறிகுறிகள் பலவற்றை உரைத்தான். ஐயமகற்றும் அடையாளங்கள் பலவற்றை அறிவுறுத்தினான். இறுதியில் ஒளிபொருந்திய கணையாழி யொன்றையும் அளித்து வாழ்த்தி வழியனுப்பினான். அனுமன் இராமனை வணங்கி விடை பெற்றுத் தென்றிசை நோக்கிச் சென்றான். அவன் செல்லும் வழியில் சம்பாதியைச் சந்தித்து சீதையைப் பற்றிய செய்தியைத் தெரிந்தான். அப்பிராட்டியை இராவணன் தனது இலங்கை மாநகரில் சிறை வைத்துள்ளான் என்பதை உணர்ந்தான். வானர வீரர்களுடன் அச்