பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு.சமுத்திரம் ★ 137


மரக்கிளை என்று நம்பி மலைப்பாம்பைத் தொட்டவள்போல, மணிமேகலை திடுக்கிட்டாள். அவளிடம் இருந்து விலகி நின்று ஒங்களுக்கு இந்தப்பிள்ள பிறந்த பிறகுதான் எங்கப்பா முடங்கிப் போயிட்டாரு என்று கூட வாதாடப் போனாள். 'என்னை யாரும் துரத்தல, நானாத் தான் வந்தேன்' என்று சொல்லப் போனாள். அவளையே கோபமாகப் பார்க்கப் போனாள். ஒரு நிமிடந்தான்.

பிறகு, கோபம் இருந்த இடத்தில் இயலாமை குடியேற வார்த்தைகளைச் சுமந்து நின்ற வாயில் கண்ணீர் சொட்டுக்கள் கரிக்க, தலையை குனிந்துகொண்டே அவள் தோப்புப் பக்கமாக நகர்ந்தாள். யாரை நொந்து என்ன பிரயோஜனம்? எல்லாம் தலைவிதி! காலத்தின் கோலம்!

வந்து ஒரு மாதமாகிவிட்டது. இதுவரை கணவனுக்கு மூன்று லட்டர் எழுதிவிட்டாள். முன்பெல்லாம் அவள் கடிதம் போய்ச் சேருமுன்னாலே 'ஏன் லட்டர் போடல' என்று அவன் எழுதுவான். அப்போதுதான் கடிதத்தை தபால் பெட்டியில் போட்டுவிட்டு வரும் அவள், அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு, 'உங்க லட்டர் இப்போதான் வந்துது என்று இன்னொரு லட்டரை அப்போதே எழுதுவாள்!. அதிலும் முழுக்க முழுக்க எழுதுவாள்! 'சீக்கிரமா வாரேன். சீக்கிரமா வாரேன்... கோபம் வேண்டாம்... கோபம் வேண்டாம்!' மனைவிக்கு பேக்டரியில் கடிதம் போடவில்லை என்று 'கோபித்து' கடிதம் எழுதிப் போட்ட அவனும், வீட்டில் காலை பத்து மணிக்கே வந்திருக்கும் கடிதத்தைப் படித்துவிட்டு, 'உன் லட்டர் வந்துது. இதுக்கு முன்னால எழுதிய கடிதத்தைத் தப்பா எடுத்துக்காதே. இருந்தாலும் இவ்வளவு நாளாகவா அங்கே இருக்கது? உன் வீடு அங்கே இல்லை; இங்கே தான்' என்று எழுத, உடனே அவளும் 'உன் வீடு இங்கேதான்னு நீங்கள் எழுதியதை நான் இப்போ இந்த மாந்தோப்பில் நின்று