பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 ♦ இல்லம்தோறும் இதயங்கள்


மணிமேகலை சற்று நிம்மதியுடன் அவனைப் பார்த்தாள். பிறகு சாவகாசமாக, நின்று நிதானித்துப் பேசலாம் என்று நினைத்தவள் போல் தன் வீட்டை நோக்கி நடந்தாள். அவன் தன்னோடு இணையாக நடந்தபோது, இவள் சிறிது விலகி நடந்தாள். இருவரும் அந்தப் பெரிய வீட்டின் வெளிப்பக்கம் நின்றார்கள்.

மணி ஒரு யோசனை சொன்னான். “இந்தச் சுவர. சிரமப்படாமலே தாவிடலாம்.”

மணிமேகலை அதை அங்கீகரிக்காதவள்போல், தலையைப் பக்கவாட்டில் ஆட்டினாள். அவன் பேசப் போவதை கேட்கப் போகிறவள் போல் காதுகளை கூர்மை யாக்குபவள்போல், முகத்தை குவித்துக் கொண்டாள். ‘கம்பவுண்டர்’ மணி பேசாமல் இருந்தான். அவளால் அப்படி இருக்க முடியவில்லை.

“பாமாவுக்குக் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா?”

“பாமாவுக்கும் ஆயிட்டுது!”

“இவங்கல்லாம் எங்க போயிருக்காங்க?”

“திருப்பதிக்கு.”

“சாமி கும்பிடவா? பரவாயில்லியே! மாமா போக மாட்டாரே?”

“வெங்கடாஜலபதிக்கு அடுத்தபடியா அவரோட ஆசீர்வதம் வேணுமில்லையா?”

“நீங்க என்ன சொல்றிங்க?”

“சொல்றேன் மனச கல்லாக்கிக்கங்க!”

“உம்...”

“ஒங்க புருஷனுக்கு ராமபத்திரன் கன்னிகாதானம் செய்றார்.”