பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189

விழாவுக்கு முனைவர் துரை நடராசன் தலைமை தாங்கி நடத்துவதைக் காண பெருமையாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்துச் சகோதர சமயத்தவர்களும் குழுமியிருக்கிறீர்கள். நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மனித குலம் முழுமைக்காகவும் இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித் தூதர். அவரது வாழ்வும் வாக்கும் மனித குலம் முழுமைக்கும் சொந்தமானது. எனவே, மீலாது விழா எம் முறையில் - அனைத்துச் சமயத்தவர்களும் பங்கேற்கும் பொது விழாவாகக் கொண்டாடப்பட வேண்டுமென விரும்புகிறேனோ அம் முறையில் அமைந்த சர்வ சமயத்தவர்கள் கொண்டாடும் பெரு விழாவாக இம் மீலாது விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உழைப்பைப் போற்றிய உத்தமர்

எல்லாவற்றையும்விட வேறொரு சிறப்பும் இம் மீலாது விழாவுக்கு உண்டு. பெருமானார் (சல்) அவர்கள் பெரிதும் மதித்த விரும்பிய உழைப்பாளிகளால் கொண்டாடப்படும் விழா என்பதுதான் அது. பெருமானாரைப்போல் உழைப்பை மதித்தவர்களை, உழைப்பாளிகளைப் போற்றியவர்களை உலக வரலாற்றிலேயே காண்பது அரிது.

சாதாரணமாக அண்ணலார் அவர்கள் பள்ளிவாசலிலே அமர்ந்திருக்கும்போது, பள்ளிக்கு வரும் தொழுகையாளிகள் பெருமானார் (சல்) அவர்களின் கரத்தைப் பற்றி முத்தமிட்டுச் செல்வது வழக்கம். அண்ணலார் புன்முறுவலோடு அம் முத்தங்களை ஏற்றுக் கொள்வார்களே தவிர யார் கரத்திலும் பதில் முத்தமிடுவது வழக்கமில்லை.

ஒரு சமயம் பள்ளிக்குத் தொழ வந்த நாட்டுப்புற அரபி ஒருவர் மற்றவர்களைப் போல் பெருமானாரின் கையை முத்தமிடக் குனிந்தார். பெருமானார் (சல்) அவர்களின் கையைப் பற்றி அவர் முத்தமிடுவதற்கு முன்னதாக அந்நாட்டுப்புற அரபியின் கையைப் பற்றியவராக மூன்று