பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

111




"மாதவனார் வடகொங்கில் வானியாற்றின்
        வண்ணகைநன் நடங்கண்டு மகிழ்ந்து வாழும்
போதிவைநாம் பொன்னயித்தை நகரில் முன்னாள்
        புணராத பரமதப்போர் பூரித் தோமே"

என்பது அவர் பாடலாகும்.

ஈரோடு மாவட்டத்துக் கத்தாங்கண்ணி சொக்கப்பெருமாள் கோயில் குலோத்துங்கசோழ விண்ணகரம் என்றும், திங்களூர் அழகப் பெருமாள் கோயில் சுந்தர பாண்டிய விண்ணகரம் என்றும் குன்னத்தூர் இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் வீரபாண்டிய விண்ணகரம் என்றும் அழைக்கப்பட்டது. இதனால் ஈரோடு மாவட்ட அரசர்கள் வைணவ சமயத்தைப் போற்றிப் புரந்தது தெரிகிறது. 'விஷ்ணு+ கிரகம்" என்ற சொல்லே 'விண்ணகரம்' என ஆயிற்று.

விசயமங்கலம் கரியமாணிக்கப் பெருமாள் கோயில் 'சித்திரமேழி' விண்ணகரம்' என்று அழைக்கப்பட்டது. “சித்திர மேழி" என்பது வேளாளர் கூடும் பெரியநாட்டுச் சபையின் அடையாளச் சின்னமாகும். இங்குள்ள பெருமாள் கோயில்கள் 'திருமேற்கோயில்', 'மேலைத் திருப்பதி', "திருமேல் திசைக்கோயில்" என்று அழைக்கப்பட்டன. கோயில் அமைந்த இடம் "திருமுற்றம்" எனப்பட்டது. இங்குள்ள "ஸ்ரீ வைஷ்ணவர்" சிலர் "பதினெட்டு நாட்டு வைஷ்ணவர்" எனப்பட்டனர்.

நம்பிமார், ஸ்ரீ வைஷ்ணவர், ஸ்ரீகார்யம் செய்வார். திருவாசல் வேளைக்காரர் ஆகியோரிடம் வைணவக் கொடைகள் அளிக்கப்பட்டன. முதல் பராந்தக சோழன் காலத்தில் கி.பி.922ஆம் ஆண்டு ஈரோடு பள்ளி கொண்ட பெருமாள் கோயிலில் "வெண்ணைக்கூத்த நாயனார்க்கு" திருவாய்ப்பாடி நாட்டவர் திருமணவரி (கண்ணாலக் காணம்) கொடுத்துள்ளனர். அப்பெயர் ஆயர்பாடியை (ஆய்ப்பாடி) நினைவூட்டுகிறது. குன்னத்தூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஈரோட்டுச் சமயமந்திரி நம்மாழ்வாரையும் எம்பெருமாள் வாரையும் எழுந்தருளச் செய்துள்ளார். வழிநடையாக வரும் தேசாந்திரி வைஷ்ணவர்க்கு நாள் ஒன்றுக்குப் பொன்னாடு நாழியால் உரியரிசி