பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

189


திவ்வியப்பிரபந்தம்

பெரியாழ்வார் தம் பாசுரம் ஒன்றில் "கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்" என்று பாடியுள்ளார். இதனை 'கொங்குக் குடந்தை' என்று பொருள் கொண்டு 'நீர் பொங்கி வழியும்படியான குடந்தை' என்று பொருள் கூறுவர். பாடலில் 'கொங்கும்' என்றேயுள்ளது. அப்பாடலில் கும்பகோணம் , திருக்கோட்டியூர், தென்திருப்பேரை என்பன ஊர்கள். அதுபோல கொங்கு ஒரு ஊர். அவ்வூர் இன்று தாராபுர வட்டத்தில் உள்ளது. கொங்கூர் என அழைக்கப்படுகிறது.

வேதாத்த தேசிகர் சத்தியமங்கலத்தில் தங்கியிருந்தபோது 'பரமதபங்கம்' என்ற நூலைப்பாடி முற்றுப்பெறச் செய்தார்.

சமணர்கள் தமிழ்ப்பணி

விசயமங்கலத்தில் வாழ்ந்த சமணர்கள் அங்கு தமிழ்ச்சங்கம் வைத்துப் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழ்ப் பணி புரிந்தனர்.

பெருங்கதையை விசயமங்கலம் கொங்கு வேளிரும், 'சீவசு சிந்தாமணியை' சத்தியவாக்கன் என்ற கங்க மன்னனால் (பொய்யா மொழி) ஆதரிக்கப்பட்டு பெருவஞ்சியாகிய தாராபுரத்தில் வாழ்ந்த திருத்தக்க தேவரும் இயற்றினர்.

எழுத்து, சொல் இலக்கணம் கூறும் நன்னூலை சியகங்கன் கேட்டுக் கொள்ள இயற்றிய பவணந்தி முனிவர் பெருந்துறை வட்டம் சீனாபுரத்தைச் சேர்ந்தவர். நேமிநாதம் என்ற இலக்கண நூலையும் வச்சணந்தி மாலை என்ற பாட்டியல் நூலையும் குணவீர பண்டிதர் விசயமங்கலம் தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றினார். சிலப்பதிகாரத்திற்கு அருஞ்சொற்பொருள் எழுதிய அரும்பத உரைகாரரும் 'சிலப்பதிகாரத்திற்கு உரை இயற்றிய அடியார்க்கு நல்லாரும் விசயமங்கலத்தையும்' அருகில் உள்ள நிரம்பையையும் சேர்ந்தவர்கள். நன்னூலுக்கு முதல் உரை எழுதிய 'மயிலை நாதர்' ஈரோட்டைச் சேர்ந்தவர்.

கொங்கு நாட்டின் பன்முக மாட்சியை விளக்கும் வரலாற்று நூலாகிய கொங்குமண்டல சதகம் பாடிய ஜினேந்திரன் என்ற கார்மேகக் கவிஞர் விசயமங்கலம் சமணர்.