பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

ஈரோடு மாவட்ட வரலாறு


இஸ்லாமியப் புலவர்கள்

பவானி வட்டம் ஜம்பையில் வாழ்ந்த ஆசுகவி காசிம் சாயபு, அரிச்சந்திர நாடகக் கீர்த்தனை, திருநீலகண்டர் நாடகக் கீர்த்தனை, பவானியாற்றுப் பெரு வெள்ளம் பற்றி 'தங்கச்சித்து நொண்டிச் சிந்து' ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். சத்தியமங்கலம் பக்கீர் சாயபுவும் காங்கயம் அய்யாவு ராவுத்தரும் பல தனிப்பாடல்கள் பாடியுள்ளனர்.

திருப்புகழ்

அருணகிரி நாதர் ஈரோடு மாவட்டத்தில் சுதித்தமலை, கனககிரி, கொங்கணகிரி, சிவமலை, சென்னிமலை ஆகிய மலைகளிலும், காங்கயம், கீரனூர், கொடுமுடி, பட்டாலி, பவானி, விசயமங்கலம் ஆகிய ஊர்க் கோயில்களில் முருகப்பெருமானையும் வழிபட்டுப் பாடல்கள் பாடியுள்ளார்.

"கொங்கிலுயர் பெற்றுவளர் தென்கரையில்
அப்பர் அருள் கொங்கணகிரி"

என்று ஊதியூர் மலையைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

“நாட்டில் அருணகிரி நாதர் திருப்புகழ் சொல்
பாட்டில் உவந்து படிக்காசு அளித்தபிரான்"

என்று சென்னிமலையாண்டவர் காதல் பாடிய அங்கண்ண செட்டியார் குறிப்பிடுவார்.

நிகண்டுகள்

காங்கயம் வட்டக் காடையூர்க் காங்கேயன் 'உரிச்சொல் நிகண்டு' இயற்றியுள்ளார். 'காங்கேயன் உரிச்சொல் நிகண்டு' என்றே அந்நூல் பெயர் பெற்றது. காங்கேயத்தில் வாழ்ந்த பள்ளித் தணிக்கையாளர் சிவன் பிள்ளை என்பவர் நூறாண்டுகளுக்கு முன்பே 'ஆசிரிய நிகண்டு' அச்சிட்டார்.

மடவளாகம் லட்சுமண பாரதி (1769-1859)

காங்கயம் வட்டம் பாப்பினி கிராமத்தைச் சேர்ந்த எட்சமண பாரதி சிவமலைக் குறவஞ்சி, மடவளாகம் தலபுராணம் போன்ற பல நூல்களையும் பல தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.