பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

ஈரோடு மாவட்ட வரலாறு


படும் குறுப்பு நாடு இவர்கள் பெயரில் ஏற்பட்டது என்பர். 'குறும்பை ஆடு' என்ற பெயர் இருப்பதும் இவர்கள் தொடர்புடையதாக இருக்கலாம்.

முடவாண்டிகள்

பூந்துறை வாரணவாசிக் கவுண்டர் பூந்துறை நாட்டுச் சத்திமங்கலம் (கஸ்பாபேட்டை) முடவர் காப்பு நிலையம் ஏற்படுத்தினார். அங்கு வாழ்ந்த கொங்கு வோளாளர்களின் வழியினர் முடவாண்டிகள் எனப்பட்டனர். இவர்கள் 'மூடவாழ்நர்' எனவும் அழைக்கப்படுவர்.

வேட்டுவர்

காளத்தி மலைப்பகுதியைப் பூர்வீகமாகவும் கண்ணப்ப நாயனாரைக் குல முதல்வராகவும் கொண்டவர்கள். காட்டுப் பகுதியில் வேட்டைத் தொழில் புரிந்து வாழ்ந்த கொங்கின் பூர்வீகக் குடிகள். இவர்களில் பூவிலுவர், மாவுலவர். காவுலவர், வேடர், வேட்டுவர் என ஐந்து பிரிவுகள் உண்டு. குருகுலர், வாழரச மணவாளம் எனவும் அழைக்கப் பெறுவர். இவர்கள் சபை 'பூலுவ நாடு' எனப்பட்டது. இவர்களில் பலர் ஊராளிகள் எனப்பட்டனர். பல செப்பேடுகள் இவர்களைக் குறிக்கும்.

வேட்டுவர்களுக்கும் வேளாளர்களுக்கும் ஏற்பட்ட பல மோதல்கள் வேட்டை, வேளாண்மை முதலிய தொழில்பற்றி எழுந்த போராட்டமே தவிர இனமோதல் இல்லை. கொடிவேரி, ஒலகடம், பட்டிலூர், திங்களூர், அரச்சலூர் போன்ற இடங்களில் வேட்டுவர்கள் கல்வெட்டுக்கள் உள்ளன.

செங்குந்தர்

படைத்தலைமை கொண்டும் (கைக்கோளப்படை) கோயில் குடிகளாக வாழ்ந்தும் (பொற்கோயில் கைக்கோளர்) நெசவுத் தொழிலை மக்கள் மானங்காக்கும் புனிதத் தொழிலாக மேற்கொண்டவர்கள். காமாட்சியம்மன் சிலம்பில் பிறந்து வீரபாகு படையில் முதல்வராக விளங்கியதால் 'முதலியார்' என்ற பட்டப்பெயர் பெற்றவர்கள். விசயமங்கலம், குன்னத்தூர், பிரமியம் போன்ற ஊர்களில் இவர்கள் கல்வெட்டுக்கள் பல உள்ளன. செப்பேடுகளும் உள்ளன.