பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

ஈரோடு மாவட்ட வரலாறு

காவேரிபுரம், கீரனூர், குண்டடம், கொளிஞ்சிவாடி, தலையநல்லூர், திங்களூர் முதலிய பல ஊர்களில் திருப்பணிகள் நடைபெற்றதாகக் கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றோம். திங்களூர் அழகப் பெருமாள் கோயில் 'வீரபாண்டிய விண்ணகரம்' என்ற பெயரால் அழைக்கப்பட்டது. குன்னத்தூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில் 'சுந்தர பாண்டிய விண்ணகரம்' எனப்பட்டது. நிலம், நாடு, ஊர், கோயில், அளவு போன்றவை சோழர் பெயரில் இருந்தவை பாண்டியர் நாளிலும் தொடர்ந்து வழக்கத்தில் இருந்தது. இது பாண்டியர் - சோழர் உறவைக் காட்டுகிறது.

சர்க்கார் பெரியபாளையம், எலத்தூர், விசயமங்கலம், திங்களூர், பாரியூர் போன்ற பல ஊர்களில் பாழ்பட்ட பழைய குளங்கள் சீர் செய்யப்பட்டன. புதுப்பிந்த விசயமங்கலம் வாகைக்குளம் 'வீரபாண்டியப் பேரேரி' என்று அழைக்கப்பட்டது. அணைகள், குளங்கள், வாய்க் கால்கள் இரவும் பகலும் உலவிப் பார்த்து சேதம் இல்லாமல் கண் காணிக்கப்பட்டது. புதுக்குளங்கள் வெட்டப்பட்டன. பவானி நொடங்கி கொடுமுடி ஆவுடையாபாறை வரை செல்லும் காலிங்கராயன் கால்வாய் 1282ஆம் ஆண்டு வீரபாண்டியன் அமைச்சன் காலிங்கராயனால் வெட்டி முடிக்கப்பட்டது. காடழித்து நாடாக்கி மக்கள் குடியேற்றப் பட்டனர்.

1285இல் ஆட்சி பீடம் ஏறிய சுந்தரபாண்டியனின் ஆட்சியாண்டு 30 ஆண்டுகள் நீடித்தது. வடகரை நாடு, பூந்துறை நாடு, காங்கய நாடு, நறையனூர் நாடு, தென்கரை நாடு, குறுப்பு நாடு, வீரசோழபுர நாடு ஆகிய நாடுகளில் ஏறக்குறைய ஈரோடு மாவட்டப் பகுதி முழுவதற்கும் சிவாலயங்களின் ஓட்டச்சு (ஒப்புக் கொண்ட வரி) குறைக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் பல உரிமைகளை அடைந்தனர். கோயில் கடமைகள் மிக நேர்மையாகச் செலுத்தப்பட்டன. பாண்டிய நாட்டு வணிகக்களும், பெருமக்களும் ஈரோடு மாவட்டக் கோயில்களுக்குத் திருப்பணியும் பொருள் உதவியும் தாராளமாகச் செய்தனர். பொதுவாக எவ்விதக் குறையும் இன்றி நல்லாட்சி நடைபெற்றது.