பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25


ஆம்,ஆயின், இஃது முடிவா, தொடக்கமா? அஃதே கேள்வி. பட்டம் பெற்றுள்ளீர்! பாராட்டுக்குரியீர், ஐயமில்லை ஆயின் பட்டம் எதற்கு? காட்டிக் களித்திடவா? அன்றிப் பணிசெய்திடக் கிடைத்திட்ட ஆணையெனக் கொண்டிடவா? நுமக்கா? நாட்டுக்கா? பொருள் ஈட்டிடவா? நாட்டுப் பெருமையினைக் காத்திடவா எதற்கு இப்பட்டம் பயன்பட இருக்கிறது? அஃதே கேள்வி! விழாத்தந்திடும் மகிழ்ச்சியுடன் இழைந்து நம் செவி வீழ்ந்திடும் கேள்வி!

தான் உண்ட நீரதனை, பன்மடங்கு பெருக்கி, பார் மகிழத் தருவதற்கே, சூல் கொண்டுலவுவது மேகம். அறிகின்றோம்.

தன் தோகைதனை விரித்து கலாப மயில் ஆடுவது தானே கண்டு களித்திடவா? பிறர் காண; பிறர் மகிழ!

தான் காத்து வைத்துள்ள பொற்குவியல் தனைக்கொண்டு, தானேயா அணிகலனைச் செய்து நிலமாது பூட்டிக் கொள்கின்றாள்?--இல்லை-- மற்றையோர் பெற்றிடத் தருகின்றாள்.

ஒளிதனை உமிழ்ந்திடும் திருவிளக்கு எதற்காக? இருளில் உள்ளோர் இடர் நீக்க!

பட்டம் பெற்றிடும் சிறப்புடையீர்! நீவீர், திருவிளக்கு--பொற்குவியல்--புள்ளிக் கலாபமயில்--கார்மேகம்--நாட்டைச் செழிக்கச் செய்திடும் வல்லுநர்கள். இசைபாட மக்கள் உமதாற்றலை ஈந்திட வந்துள்ளீர், இதற்கான அனுமதிச்சீட்டே இந்தப் பட்டங்கள். இத்தகையோரைப் பயிற்றுவித்து அனுப்பிக் கொடுப்பதுவே பல்கலைக் கழகத்தின் தனிச்சிறப்பு; நாட்டின் பொதுவுடமை நீவீர்! இன்று நமக்கென்று பெற்றுள்ள நற்பட்டங்கள் மறந்திடுவோர் அல்லர் நீவிர். எனினும் எடுத்துரைக்க வந்துள்ளேன்--இயம்புகின்றேன்.