பக்கம்:உலகு உய்ய.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இந்தக் காலக் கல்வி முறை, இளைஞர்களை நாட்டுக்கு அயலாராக ஆக்கியதோடு வீட்டுக்கும் அயலாராக ஆக்கி விட்டது-என்பதான ஒரு கருத்தை அண்ணல் காந்தியடிகள் வெளியிட்டுள்ளார்கள். இந்தக் காலத்தில் படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள் பலர், வெளியில் சிறு தொழில் செய்ய நாணப்படுவதன்றி, வீட்டுக்குத் தேவையான வேலைகளைச் செய்யவும் நாணுகின்றனர். கடைக்குப் போய்ப் பொருள்கள் வாங்கிவரச் சொன்னால், இன்னின்ன பொருள்களையே யான் வாங்கி வருவேன் - இன்னின்ன பொருள்களை வாங்கி வரமாட்டேன் எனப் பட்டியல் கள் தருகிறார்கள். எந்த வேலைக்காகவும் - எப்பொருள் வாங்கி வருவதற்காகவும் வெளியில் செல்வதென்றாலும், ஆடம்பர-நாகரிக உடை உடுக்காமல் வெளியில் புறப்படக் கூசுகிறார்கள்; யான் இந்த எளிய உடையோடு வெளியில் போகமாட்டேன் என்று அறவே மறுக்கிறார்கள். இந்த நிலை நீடிக்கும் வரை வீடும்-நாடும் உருப்படுவது எவ்வாறு?

அமெரிக்கா (U.S.A.) ஒரு செல்வ நாடு. அந்நாட்டில் உள்ள செல்வர் வீட்டுப் பிள்ளைகள், இளமையிலேயே தம் சொந்தச் செலவிற்காகப் பெற்றோரை எதிர்பார்க் காமல், வீட்டுக்கு வீடு நாட்செய்தித்தாள் போடுதல் போன்ற வேலைகள் செய்து பொருள் ஈட்டுவராம். ஏழை களாயிருப்பவரோ, வெளிநாடுகளிலிருந்து படிக்கச் செல்ப வரோ, உணவுக் கடையிலும் (Hotel) வேறு கடைகளிலும் ஒய்வு நேரத்தில் வேலை செய்து பணம் சேர்த்துப் படிப்ப துண்டாம். இதனை, இந்தியா உட்பட எல்லா நாட்டு இளைஞர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்-குறிப்பாகப் பட்டம் பெற்ற இளைஞர்கள் இதனை உணர வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/113&oldid=544769" இலிருந்து மீள்விக்கப்பட்டது