பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

109

பின்னும் ஒரு பயன் படிப்பவரைச் சார்வது. அரசர்களையும், பிற தலைவர்களையும் புகழ்ந்து பாடினால் பாடிய புலவனுக்கு ஊதியம் கிடைக்கும். பாடப்பெற்ற தலைவருக்குப் புகழ் கிடைக்கும். அதனைப் படிக்கிறவர்களுக்குத் தமிழ் இன்பம் கிடைக்கும்.

இங்கே கந்தர் அலங்காரத்தைப் பெற்றவன் முருகன். அவனுக்கு இந்த அலங்காரத்தால் ஏதேனும் பயன் உண்டா என்றால்,அப்படி ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. அநாதி காலம் முதல் வேதம் முதலிய நூல்கள் எல்லாம் அவனுடைய புகழைச் சொல்கின்றன. அப்படிச் சொல்வதனால் அவனுடைய புகழ் புதிதாக விரியவில்லை. சொல்லாமல் விட்டால் அவன் புகழ் குறைந்து போவதும் இல்லை. முருகனைப் பற்றிய எண்ணம் பல மனிதர்களுக்கு உண்டாவதனால் முருகனுக்கு லாபம் எதுவும் இல்லை அந்த மக்களுக்குத்தான் லாபம் உண்டு. ஆகவே பாட்டுடைத் தலைவனாகிய முருகனுக்குக் கந்தர் அலங்காரத்தால் பெரிய பயன் ஒன்றும் இல்லையென்றே சொல்லலாம்.

இந்த அற்புதமான நூலை இயற்றிய அருணகிரி நாதருக்கு ஏதேனும் பயன் உண்டா என்பதைப் பார்க்கலாம். அருணகிரி நாதர் இந்தப் பாடலைப் பாடி அதனால் முருகப்பெருமானுடைய திருவருளைப் பெற்றிருக்கலாம். ஆனாலும் பாடல் பாடாமலே அந்தப் பிரானுடைய திருவருளைப் பெறும் தகுதி அவருக்கு உண்டு. இந்தப் பாட்டைப் பாடினார் என்ற புகழ் அவருக்கு உண்டாவது ஒருவகை லாபந்தான். ஆனால் அதை அவர் எதிர்பார்க்கவில்லை. கந்தர் அலங்காரம் பாடினதன் முக்கியமான நோக்கம் தமக்குப் புகழ் வரவேண்டும். என்பது அன்று. அவர் புகழாசைக்கும் மேற்போனவர்.