பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. பிணியுறு காதை



பாப்புனையுந் திறனுடைய புலவர் என்பார்
படுவிரைவில் உணர்ச்சிகளுக் காளாய் நிற்பர்;
வாய்ப்பனவாம் இன்பதுன்பம் இரண்டி னுள்ளும்
வருகின்ற அவ்வுணர்வின் வடிவாய் நிற்பர்;
காப்பிட்டு மறைத்துவிட அறிய மாட்டார்
காட்டிடுவர் உணர்ச்சிகளை வெளிப்ப டுத்தே
யாப்பவர்க்குத் தடையாக நிற்ப தில்லை
அவர்வழியில் அதுநிற்கும் பாடல் தோன்றும்.1

வடித்தெடுத்த சொல்லழகர், நீற ணிந்த
வடிவழகர், இருமொழியும் சொன்ன நூல்கள்
படித்தெடுத்த வாயழகர், சான்றோர் கூட்டம்
பழகவரும் நட்பழகர், முதுமை யுற்றார்;
துடுக்குடுத்த வாதநோய் அவரைப் பற்றித்
துன்புறுத்தத் துயர்க்கடலுள் வீழ்ந்து நொந்
தார்;
வடுக்கெடுத்த மதியரைத்தான் தமிழ வானில்
வாதமுகில் ஒளிமறைக்க வந்த தம்மா !2