பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊன்றுகோல்

சன்மார்க்க சபையார் புலம்பல்


‘தலைவிக்கோ தலைவனில்லை; மகனுக்கோ
தாயில்லை, பூத்தி ருக்கும்
மலருக்கோ மணமில்லை, வானுக்கோ
மதியில்லை, மறவர் கூட்டத்
தலைவற்கோ வாளில்லை; சன்மார்க்க
சபையினுக்கோ நீதான் இல்லை
நிலைமைக்கே என்செய்வோம்?’ எனச்சபையார்
நெஞ்சுழன்று மயங்கி நின்றார். 10

கவிமணி புலம்பல்


‘பத்தரெலாம் போற்றிவரும் பண்டிதமா
மணியேநீ வாத வூரர்
சித்தமெலாங் கசிந்துருகிச் சிவமாகிச்
செய்தருளும் வாச கத்தின்
புத்தமுதைக் கடைந்தெடுத்து வழங்கிவரும்
புண்ணியந்தான் முற்றா முன்னர்![1]
அத்தனடிக் காளாகி அதனிழலில்
அமர்ந்தனையே ஐயா ஐயா!’ 11

'அடங்கொண்ட நோயதனால் அல்லலுக்கே
ஆளாய்நிற் கின்றேன், காலன்
வடங்கொண்டு வருங்காலம் வாராதோ
எனைநோக்கி என்று நொந்தேன்
நடங்கண்ட அம்பலத்து நாதனடி
நண்ணினைநீ எனக்கும் ஆங்கோர்
இடங்கண்டு வையென்று கவிமணியார்
ஏங்கியமனம் பேத லித்தார்.12


  1. திருவாசக உரை முடியுமுன்னே