பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27..............................எதைத் தேடுகிறாய்.?

மூத்த பிள்ளை!

அன்பினால்பெற்றெடுக்கும்
ஆவிநிகர் பிள்ளை யோடே
உன்னையும் பாசம் பொங்க
உரைப்பார்கள்'பிள்ளை' என்றே!
தென்பாங்குத் தமிழர் சொத்தே!
தென்னையே! உன்னைப் போலே
மன்பதைக்கே தன்னை ஈயும்
மற்றொரு தியாகி இல்லை!

திண்ணிய குறிக்கோ ளுடையார்;
செருப்பகைமேல் பாயும் வீரர்;
புண்ணியம் செய்யும் கையார்;
புரையிலா ஞானி - இவர்கள்
எண்ணங்கள் குனிவதில்லை!
எப்போதும் ஓங்கும்!அந்த
வண்ணமே நீயும் என்றும்
வளர்கின்றாய் வானை நோக்கி!