பக்கம்:எழில் விருத்தம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

வாணிதாசன்

புல்லும் புதரும் மணக்கும்;
    பூண்டும் கொடியும் மணக்கும்;
கல்லும் மணக்கும்; சருகு
    கண்ட இடமும் மணக்கும்;
செல்லும் வழியும் மணக்கும்;
    சிறுசெடிப் பூவும் மணக்கும்;
அல்லும் பகலும் மணத்தை
    அள்ளி வழங்குமே சோலை!........................ 9

குளக்கரை பூத்தமா வேம்பு
    குடிசெய் குயிலிசை மீட்ட
அளப்பரும் தோகைநின் றாட
    அழைப்பன போற்கிளை சாய
விளக்கினை ஏந்தியே மன்றில்
    விழவயர் கன்னியர் போலக்
குளத்துச்செவ் வல்லியும் பூக்கக்
    குளிர் அர(சு) ஒச்சிடும் சோலை!................. 10

"கடையது மாவிள மாச்சிர்
         கலந்தது வெண்டளை என்ப(து)
உடையது பாதியி ரண்டும்"

என்னும் 'விருத்தப் பாவியல்' நூற்பாவுக்கு ஏற்ப அமைந்த அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம். விளத்திற்குப் பதிலாக மாங்காய்ச்சீரும் வரலாம். எனவே, இருவகை வெண்டளைகளும் விரவியிருக்கப் பெறும் என அறிக.