பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியம்

௬௩

தாலும் தொல்காப்பியத்தில் உள்ள சில இலக்கண வழுக்க ளாலும் தொல்காப்பியர் ஆரியர் என்று துணியப்படும்.

தொல்காப்பிய வழுக்கள்

(1) “சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

அஐ ஒளஎனும் மூன்றலங் கடையே”
(தொல். மொழி. 29)


“சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி
சளிசகடு சட்டை சவளி — சவிசரடு
சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும்
வந்தனவாற் சம்முதலும் வை”

என்பது நன்னூல் (எழு. 51) மயிலைநாதர் உரை மேற்கோள்.

சக்கை, சட்டம், சடுதி, சண்டை, சதை, சப்பு, சமன், சமர், சமை, சருச்சரை, சரேல், சல்லி, சலசல, சலி, சவம், சவை, சழி, சள்ளை, சளை முதலிய பல சகர முதற்சொற்கள் செந்தமிழ்ச் சொற்களாதலின், சகரம் தமிழில் மொழிமுதல் வராது என்பது வழுவே.

இனி, சகரக்கிளவிபற்றித் தொல்காப்பியர்மீது வழுவைச் சுமத்தாது, ஏட்டிலிருந்தெழுதினோர்மீது சுமத்துவர் துடிசை கிழார் அ. சிதம்பரனார். அவர் கூறுமாறு :—

“க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும்
எல்லா வுயிரொடும் செல்லுமார் முதலே”
(தொல். மொழி. 28)


“சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அ, ஐ, ஒள வெனும் மூன்றலங் கடையே”
(தொல். மொழி. 29)


“இவ் விரண்டு சூத்திரங்களும் ஆதியில், அதாவது, ஏட்டுச் சுவடியில் இருக்குங் காலத்து, ஒரே சூத்திரமாகத் திகழ்ந்தன.

“சுவடியில் உள்ளபடி ஈண்டுத் தருவாம்:—

“க, த, ந, ப, ம எனு மாவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அவை ஒளஎன்னும் ஒன்றலங் கடையே”