பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்தியர்

௧௫௯

பாண்டியன் தமிழ்ப்பாரதம், திருச்சிராப்பள்ளியந்தாதி. ஸ்ரீராஜ ராஜ விஜயம், நாடக நூல், வீரணுக்க விஜயம், குலோத்துங்க சோழ சரிதை, அஷ்டாதச புராணம், அருணிலை விசாகன் தமிழ்ப் பாரதம். பெருவஞ்சி, அத்திகிரித் திருமால் சிந்து, காங்கேயன் பிள்ளைக்கவி, வீரமாலை, திருவதிகைக் கலம்பகம். திருவல்லையந்தாதி முதலியவை, இதுவரையறியப்படாத நூல்களாகச் சாஸனத்தமிழ்க்கவி சரிதத்திற் குறிக்கப்பட்டுள்ளன.

கடைக்கழகத்திற்குப் பிற்பட்ட புலவர்களியற்றிய நூல் களிற் பல இப்போது கிடைக்கவில்லை. ஒட்டக்கூத்தரியற்றிய அரும்பகைத் தொள்ளாயிரம், எதிர்நூல் முதலியவை இன்னும் வெளிவரவில்லை.

இடைக்கழக விருக்கையாகிய கபாடபுரத்தில், எண்ணாயிரத் தெச்சம் நூல்களிருந்து பின்பு கடல்கோளுண்டழிந் தனவென்றொரு வழிமுறை வழக்குள்ளது.

பற்பல கலைகள் பண்டைத் தமிழிலிருந்து பின்பழிந்து போயின வென்பதை,

“ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம்
தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள”

என்னும் செய்யுளா லறியலாம்.

மேற்கூறிய நூல்களெல்லாம் அழிந்து போனமைக்குக் கடல் கோள்களும், ஆரியத்தினால் தமிழர் உயர் நிலைக்கல்வியிழத்தமையும், இருபெருங் காரணங்களாகும்.

தொல்காப்பியம் ஒன்றில் வல்லவரே ஒரு பெரும் புலவராக மதிக்கப்படுகின்றார். தொல்காப்பியத்திற்குச் சமமும் அதினுஞ் சிறந்தவு மான ஏத்துனையோ நூல்கள் இறந்துபட்டன.

அகத்தியர்

}அகத்தியர் என்று எத்தனையோ பேருளர். அவருள் முதலாவாரே இங்குக் கூறப்படுபவர்.