பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧௬௪

ஒப்பியன் மொழி நூல்

இந்திரன்—ஐந்திரம் என்னும் திரிபாகுபெயர் (தத்திதாந்த) முறையினாலும், ஐந்திரத்தினும் வேறாக “முந்துநூல்கண்டு” எனச் சில நூல்களைப் பனம்பாரனார் குறித்தலாலும் அது வடமொழி யிலக்கணமே யெனக் கொள்ள இடமுண்டு. ஆதலால்.

“புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின்
விண்ணவர் கோமான் விழுதூ லெய்துவீர்“

“கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கை விளக்கங் காணாய்“

என்று சிலப்பதிகாரத்தில், நாடுகாண்காதையிற் கூறினதுமென்க.

“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்“ என்று தொல்காப்பியர் சிறப்பிக்கப்படுவதால், ஐந்திரம் மிக விழுமிய நூலென்பது பெறப்படும். இந்திரன் மருதநிலத்துப் பண்டைத் தமிழ்த் தெய்வமாதலின், ஐந்திரம் அதன் சிறப்புப்பற்றியும் நூலாசிரியன் பெயரொப்புமைபற்றியும் அத்தெய்வத்தினதாகக் கூறப்பட்டது. இறையனார் அகப்பொருள் அதன் நூலாசிரியன் பெயரொப்புமை பற்றியும், கோயிற்பீடத்தடியிற் கிடந்தமை பற்றியும், சிவ பெருமானியற்றியதாகக் கருதப்பட்டமை காண்க. இந்திரனுக்குப் பண்டைத் தமிழ்ப் பெயர் வேந்தன் என்பது. இந்திர தெய்வத்திற்குப் பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த பெருமையைச் சிலப்பதிகாரத்தானும் மணிமேகலையானு முணர்க.

தமிழில் 8 வேற்றுமையும் ஒரே காலத்தில் தோன்றினவையல்ல. முதலாவது 5 அல்லது 6 வேற்றுமைகள்தாம் தோன்றியிருக்க முடியும்; இறுதியில் தோன்றினது எட்டாம் வேற்றுமை, அது ஒரு காலத்தில் முதல் வேற்றுமையின் வேறுபாடென்று அதனுள் அடக்கப்பட்டது. இதையே,

“ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை
வேறென விளம்பரன் பெயரது விகாரமென்
றோதிய புலவனு முளன்“

என்பது குறிக்கும். ஆங்கிலத்திலும் விளிவேற்றுமையை முதல் வேற்றுமையின் வேறுபாடு (Nomintaive of Address) என்றே கூறுவர்.