பக்கம்:ஓங்குக உலகம்.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

ஓங்குக உலகம்


கூடும் தெய்வநெறியோ காதல் நெறியோ சிறந்ததென இறைநிலையுற்றும் உயிர்த்தியாகம் செய்தும் புகழ்பெற்ற பெண்களை மேலே கண்டோமே அந்த நிலையில்கூட ‘கற்பினுக் கணியாய்’ சீதையை வைத்து எண்ண வழியில்லையா? நல்லவேளை, கம்பன் இந்தச் சிக்கல் எல்லாம் தமிழதத்துக்கு-மரபுக்கு-கற்புநெறிக்கு-காதல் வாழ்வுக்குத் தேவை இல்லை என எண்ணித்தானோ, பட்டாபிஷேகத்தோடு முடித்துக் கொண்டான் என எண்ண வேண்டியுள்ளது. உண்மையில் இராமனையும் சீதையையும் மாசற்றவர்களாக உலகுக்குக் காட்ட விரும்பும் பேச்சாளரும் பிரசங்கிகளும் கம்பன் வழிநின்று அவர்கள் இருவரையும் அரியணையில் அமர்த்தி அமைதி கொள்வதே சாலப் பொருந்துவதாகும்.

இந்த முடிவே பிரிவு காணாத முடிவு. உளத்தால்-இராவணன் இடத்திருந்தபோதும்-மறக்காத தெய்வ நெறி முடிவே உள்ளம் பிரியாது ஒன்றிய காதல் வாழ்வைக் காட்டும் முடிவு. எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எத்தனை இடர்கள் இடையிடையே வந்தாலும் பிரிக்கமுடியாத-பிரிவறியாத உணர்வு; புனிதவதியும் கெளரியும் மீராவும் மற்ற நல்ல மங்கையும் பிரிந்தறியாத பேருண்ர்வு; எங்கேனும் யாதாகிப் பிறந்திடிலும் எதனாலும் இடருற்றாலும் மதத்தால் பிரிந்து நின்றாலும்-உணர்வு அழிந்து மறப்பது போன்ற நிலை நேரிலும் மறவாமல் இணைந்த, பிரிக்க முடியாத பெருநிலையே அது. இந்த உணர்வையே கம்பன் தம் முடிவின் மூலம் உலகுக்கு உணர்த்தி விட்டான். அவனைப் பாடுபவரும் அதே நிலையில் உணர்த்தி உயர்வார்களாக!


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/181&oldid=1135856" இலிருந்து மீள்விக்கப்பட்டது