பக்கம்:கனிச்சாறு 5.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72  கனிச்சாறு - ஐந்தாம் தொகுதி


81  நல்லதும் தீயதும்!

கனி இருக்கக் காயினைக்
கவர்ந்து தின்னல் நல்லதோ!
இனி திருக்கத் தீயதை
ஏற்றுச் செய்ய நினைப்பதோ?

நிழல் இருக்க வெயிலிலே
நடந்து செல்லு வார்களோ?
குழல் இருக்க இடியினைக்
கேட்டு மகிழு வார்களோ?

வீடிருக்க வெளியிலே
விழுந்து தூங்கப் போவரோ?
நாடிருக்கக் காட்டினை
நாடி வாழல் நல்லதோ?

கிளி இருக்கக் காக்கையைக்
கூட்டில் வைத்துக் காப்பரோ
உளி இருக்க விரலினால்
உருவம் செதுக்க முனைவரோ?

அன்பிருக்க நெஞ்சிலே
அழுக்கு எண்ணம் வைப்பரோ?
பண்பிருக்க விலங்குபோல்
பழகி வாழல் நல்லதோ?

உண்மை இருக்கப் பொய்யினை
உரைத்து வாழல் ஏற்றதோ?
நன்மை இருக்கத் தீமையை
நாடிச் செய்தல் நல்லதோ?

-1960
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/106&oldid=1424922" இலிருந்து மீள்விக்கப்பட்டது