பக்கம்:கனிச்சாறு 5.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  97


98  முன்னேறு!

முன்னேறு முன்னேறு ஏறுமுன் னேறு!
முழுமூச்சி னோடிறுதி வரையில் முன் னேறு!
எந்நாளும் குறையாத தளராத ஊக்கம்,
ஏறுநடை கொண்டுமுன் னேறுமுன்னேறு!

பன்னூலைக் கற்றுமுன் னேறுமுன் னேறு!
பலதொழிலைக் கற்றுமுன் னேறுமுன் னேறு!
தன்னுணர்வு கொண்டுமுன் னேறுமுன் ஏறு;
தளராத உள்ளத்தி னோடுமுன் னேறு!

வருகின்ற எதிர்ப்புக்கஞ் சாதுமுன் னேறு!
வாய்மையினை உள்ளத்திற் கொண்டுமுன் னேறு!
பெறுகின்ற தோல்விக்கஞ் சாதுமுன் னேறு;
பேருயர்வை எண்ணிமுன் னேறுமுன் னேறு!

நடையில்முன் னேறு;முன் னேறுசெந் தமிழில்!
நட்பில்முன் னேறு;முன் னேறுதாய் அன்பில்;
கொடையில்முன் னேறுமுன் னேறுவிருந் தோம்பில்;
குறுகுமனப் பான்மைவிட் டேறுமுன் னேறு!
அறிவில்முன் னேறுநல் வினையில்முன் னேறு!
அழகில்முன் னேறுநற் கலையில்முன் னேறு;
பொறையில்முன் னேறு, கைத் தொழிலில்முன் னேறு!
போக்கில்முன் னேறு,நல் நோக்கில்முன் னேறு!

உண்மையைப் பற்றிமுன் னேறு;முன் னேறு!
உழைப்பினைக் கொண்டுமுன் னேறு;முன் னேறு!
பெண்மையைப் போற்றிமுன் னேறு;முன் னேறு!
பேய்மையை வீழ்த்திமுன் னேறு;முன் னேறு!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/131&oldid=1425742" இலிருந்து மீள்விக்கப்பட்டது