பக்கம்:கனிச்சாறு 5.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


112

நெறிமுறைகள்!


பசித்திடும் ஒருவன் தனக்கென ஒருபிடி
புசித்திடக் கேட்பான்; அது ‘நீதி’!
புசித்திட ஒருபிடிச் சோறிருந் தாலும்
பசித்தவனுக் கிடு;அதிற் பாதி!

வகுத்துக் கொடுத்ததை வாங்கி யருந்தியும்
மிகுத்திட வேண்டுவான் அதுதீது!
தொகுத்ததைத் தானே திருடியும் எடுப்பான்,
தகுசெயல் அல்ல அதுசூது!

வீடில்லாதவன் தனக்கென வீட்டைத்
தேடுதல் தான் மிகச் சரி!
வீடொன் றிருந்தும் மறுவீ டொன்றைத்
தேடுதல் கேடென அறி!

தனக்குள தொன்றைப், பிறரிட மிருந்து
காத்தல் தான் நன் நெறி!
தனக்குள் உடைமையைப் பெருக்கிடப் பிறரின்
உடைமையை மாய்ப்பது வெறி!

தன்மகள் வாழ நோய்நொடி நாடா(து)
அவளைக் காப்பது நெறி!
தன்மகள் வாழத் தமக்கை மகளது
வாழ்வைக் கெடுப்பது வெறி!

தன்மொழி வாழ விரும்புவான் ஒருவன்
தன்மொழி காப்பான் அது நெறி!
தன்மொழி வாழ விரும்பிப் பிறரின்
இன்மொழி மாய்ப்பான்அது வெறி!

-1976
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/148&oldid=1444859" இலிருந்து மீள்விக்கப்பட்டது