பக்கம்:கனிச்சாறு 5.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116  கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி


114

விளையாட்டும் வேடிக்கையும்!


விளையாட் டென்றும்
வேடிக்கை யென்றும்
வீணாய்ப் பொழுதைக் கழிக்காதே! - உன்
இளமைக் காலம்
இனிமைக் காலம்!
இழிவாய் அதனை இழக்காதே!

களியாட் டென்றும்
கவறாட் டென்றும்
காசை வீணாய்த் தொலைக்காதே!
ஒளியாய் உள்ளத்
துணர்வும் அறிவும்
ஒருங்கே இழந்து மலைக்காதே!

உளத்தை பயிற்று;
உடலைப் பயிற்று;
ஓய்வை வீணாய்ப் போக்காதே! - மனக்
களத்தை உழுது
கருத்தைப் பயிர்செய்;
கறம்பாய் அதனை ஆக்காதே!

-1979
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/150&oldid=1444868" இலிருந்து மீள்விக்கப்பட்டது